Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 12 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டமை, தப்பியோடுவதற்கு அல்ல. இந்த அரசாங்கம் பெற்றுள்ள கடன் அளவின் அடிப்படையில், அபிவிருத்திகள் நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை” எனச் சுட்டிக்காட்டியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டரின் ஊடாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கேள்வி: தேசிய அரசாங்கத்தால் தேசிய பிரச்சினையைத் தீர்க்க முடியுமென நம்புகிறீர்களா?
பதில்: இதுவரையிலான அவர்களது செயற்பாடுகளோ நடத்தைகளோ, அந்த உணர்வைத் தரவில்லை.
கேள்வி: எதிர்காலத்தில், உங்கள் அரசாங்கத்தில், FCIDஐத் தொடர்ந்தும் பேணுவீர்களா?
பதில்: FCID என்பது, சட்டவிரோதமான அமைப்பு. ஏற்கெனவே உள்ள இலங்கைச் சட்டத்தின் கீழ், நல்லாட்சி அரசாங்கத்தில் தவறுசெய்தவர்கள் மீது விசாரணை நடத்தி, குற்றஞ்செய்தவர்களைத் தண்டிப்போம்.
கேள்வி: உங்களது அரசாங்கத்துக்கும் பொது பல சேனாவுக்குமிடையிலான உண்மையான உறவு என்ன? சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக, நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
பதில்: பொது பல சேனா இப்போது யாருடன் உள்ளது என்பதை, நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம்.
கேள்வி: மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உங்கள் நகர்வை, எப்போது மேற்கொள்வீர்கள்?
பதில்: மக்கள் தயாராக இருக்கும் போது. அது, மிக விரைவில் நடக்குமென நாம் நம்புகிறோம்.
கேள்வி: பாதி இலங்கையரான பிரித்தானியப் பிரஜையான நான், எதிர்காலத்தில் இலங்கையில் வாழ விரும்புகிறேன். குடிவரவு தொடர்பான உங்கள் பார்வை என்ன?
பதில்: வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீளத்திரும்பி, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு நான் வரவேற்கிறேன். இனிமேலும் நீங்கள் பயன்படத்தேவையில்லை. போர் முடிவடைந்துவிட்டது. உங்களுடைய நிபுணத்துவம் தேவை.
கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து முடித்துவிட்டீர்களா? பிரதான காரணங்கள் எவை?
பதில்: பல காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் ஆராய்ந்துள்ளோம். எதிர்காலத்துக்காக நாம் தயாராக உள்ளோம்.
கேள்வி: ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான சீன ஒப்பந்த விடயத்தில், முன்னரே அறிவிக்கப்படாமை ஏன்? ஏலக் கோரிக்கை இல்லாமை ஏன்?
பதில்: எனது நிர்வாகத்தில் சீனாவுடன் இடம்பெற்ற ஒவ்வொரு பேரம்பேசலும், சரியான நடைமுறைகளைப் பின்பற்றியதோடு, அவை ஆவணப்படுத்தப்பட்டுமுள்ளன.
கேள்வி:ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான சூழலியல் பிரச்சினைகளை எழுப்பினீர்கள். உங்களுடைய ஆட்சிக் காலத்தில், அவை ஏன் எழுப்பப்படவில்லை?
பதில்: சமீபத்திய ஒப்பந்தத்தின்படி, செயற்றிட்டத்தின் அளவு விரிவாக்கப்பட்டது. அதனால், சூழலியல் பாதிப்புகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
கேள்வி: திருத்தஞ்செய்யப்படும் அரசியலமைப்பு, அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்குமா? குறிப்பாக இனங்கள் சம்பந்தமானவை? இல்லாவிடில், சிறுபான்மையினர் அல்லது பெரும்பான்மையினருக்குச் சாதகமாக அமையுமா?
பதில்: மக்களின் முன்னால், தெளிவான [வரைவு] ஒன்று முன்வைக்கப்படவில்லை. ஆனால், நோக்கங்கள் குறித்து நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
கேள்வி: ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பாக உங்களது எண்ணங்கள் எவை?
பதில்: முன்னைய நிர்வாகங்கள் போலல்லாது, தேசங்களின் இறையாண்மையை மதிக்கும் புதிய வெளிநாட்டுக் கொள்கைக்கு, ஐக்கிய அமெரிக்காவை டொனால்ட் ட்ரம்ப் கொண்டுசெல்வார் என நான் உணர்கிறேன்.
கேள்வி: உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. உங்களது உத்தி என்ன? ஸ்ரீ.ல.சு.கவுடன் செல்வீர்களா, இல்லையெனில் பொதுஜன பெரமுனவுடன் இணைவீர்களா?
பதில்: தேர்தல் வரும்போது, மக்களின் விருப்பைப் பிரதிபலிக்கும் பலமான, ஒன்றிணைந்த சக்தியுடன் நாம் தயாராக இருப்போம்.
கேள்வி: நாட்டுக்குத் தற்போது தேவைப்படும், முதல் 3 பொருளாதார சீர்திருத்தங்கள் எவை?
பதில்: ஒவ்வொரு இலங்கையருக்கும் பலனளிக்கின்ற, அனைவரும் உள்ளடங்கிக் காணப்படுகின்ற அபிவிருத்திக்கு நாம் ஆதரவு. தொடர்ந்துவரும் நாட்களில், பல சீர்திருத்தங்கள் இடம்பெறும்.
கேள்வி: திங்கட்கிழமை (ஜனவரி 9) இடம்பெற்ற சந்திப்பில், ஹம்பாந்தோட்டையிலுள்ள முதலீட்டு வலயத்துக்கான உங்கள் எதிர்ப்புத் தொடர்பில், சீனத் தூதுவர், சீனாவின் விருப்பமின்மையை வெளிப்படுத்தினாரா?
பதில்: இல்லை. தற்போது இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பாக, தூதுவருக்கும் கேள்விகள் இருந்தன.
கேள்வி: சீனாவின் நலன்களுக்கு எதிராக நீங்கள் நடந்தால், போர்க்குற்ற விசாரணையில், சீனா உதவுமென நினைக்கிறீர்களா?
பதில்: இலங்கைக்கெதிரான தீர்மானங்களின் பின் தீர்மானங்களாக மேற்கத்தேயக் கூட்டணி கொண்டுவந்த போதிலும், சீனா எப்போதும் எங்களுடனேயே இருந்தது.
கேள்வி: உங்களுடைய காலத்தில், ஜனாதிபதி செயலணியால் காணிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வில்பத்து விடயத்தில் உங்கள் கருத்து என்ன?
பதில்: எங்களுடைய சூழலையும் இயற்கை வளங்களையும் சேதப்படுத்தாமலேயே, மீளக்குடியமர்த்துதல் எப்போதும் இடம்பெற வேண்டும்.
கேள்வி: பொதுபல சேனா தற்போது உங்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. உங்களது கருத்து என்ன?
பொதுபல சேனாவுக்கு பின்னால் இருப்பது யார் என்று, பொதுமக்களுக்கு இப்போது தெரிந்திருக்கும்.
கேள்வி: நாடாளுமன்றத்தில் வாக்களிப்புத் தருணங்களில் (உதாரணமாக: பாதீடு, திருத்தங்கள்), நீங்கள் எப்போதும் ஏன் சமுகமளிப்பதில்லை?
பதில்: எல்லா விடயங்களிலும் எனது நிலைப்பாட்டை, நான் எப்போதும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். மிகவும் பொருத்தமான நேரங்களில் நான் அங்கிருப்பேன்.
கேள்வி:வில்பத்து சரணாலயம் தொடர்பில் உங்களது கருத்து என்ன?
பதில்:அபிவிருத்தி அல்லது மீள்குடியேற்றத்துக்காக சுற்றாடலை மாசுப்படுத்துதல் என்பது எந்தவொரு நிலையிலும் இடம்பெறவில்லை.
கேள்வி: உங்களுடைய கடந்த விஜயத்தின் போது, சீன செயற்றிட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டீர்கள் என உத்தரவாதம் வழங்கினீர்களா?
பதில்: இலங்கை மக்களின் நலன்கள் காக்கப்படும்வரை, அபிவிருத்திப் பணிகளுக்காக சீன உதவியைப் பெறுவதில், நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
கேள்வி: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோற்கடிக்கப்பட்டீர்கள். இப்போது மீள்வருகை செய்ய விரும்புகிறீர்கள். இப்போது வெல்வீர்கள் என, எதை வைத்து நினைக்கிறீர்கள்?
பதில்: மக்களின் போராட்டம், தனிநபர்களைப் பற்றியதன்று. மக்களின் ஆணையை, தலைவர்கள் பின்பற்றுவர்.
கேள்வி: சீனத் தூதுவருடனான உங்கள் சந்திப்பில், சீனாவுக்கெதிரான உங்கள் கருத்துகள் தொடர்பாக அவர் அதிருப்தியடைந்தார் என்று, அச்சந்திப்புத் தொடர்பில் தெரிந்தோர் கூறுகின்றனரே?
பதில்: அது உண்மையன்று. அது மிகவும் சுமுகமான கலந்துரையாடல்.
கேள்வி: ஜனாதிபதியாக உங்கள் காலத்தில், உங்கள் குடும்பத்தினருக்கு அதிகாரங்களையும் பலத்தையும் வழங்கியதைப் பற்றிக் கவலையடைகிறீர்களா? குடும்ப ஆட்சி தொடர்பில் உங்களுடைய தற்போதைய நிலைப்பாடு என்ன?
பதில்: குடும்ப உறுப்பினர்கள் என்று நீங்கள் குறுப்பிடுவோர், ஜனநாயகரீதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர்கள். கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரம் விதிவிலக்கு, அவரது பங்களிப்பு, நாடு முழுவதும் அறிந்தது.
கேள்வி: தேசிய சொத்துகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பதை நாம் எவ்வாறு தடுக்கலாம்? உங்களால் உத்திமிக்க நடவடிக்கை முக்கியமென நினைக்கிறேன்.
பதில்: இந்தத் துரோகத்தை, மக்களின் சக்தி மாத்திரமே நிறுத்த முடியும். இவற்றுக்கெதிரான நிற்குமாறு, மக்களின் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
கேள்வி: நாட்டில் தற்போது அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். இது தொடர்பாக உங்களுடைய கருத்து?
பதில்: அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்தொகைக்கேற்ப அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடனுக்கேற்றால் போன்று அபிவிருத்தி திட்டங்களை செய்யப்படுகின்ற என்பது சாதாரண ஒருவருக்கே தெரிந்த விடயமாகும்.
கேள்வி: நாட்டை மீண்டும் தலைமை தாங்கும் வாய்ப்புக் கிடைத்தால், எதை வித்தியாசமாகச் செய்வீர்கள்?
பதில்: இந்த நாட்டை யார் வழிநடத்தினாலும், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிகளுக்குச் சரியான விடயங்களைச் செய்ய வேண்டும்.
கேள்வி: நாட்டிலுள்ள இளைஞர்களை இணைத்துக்கொண்டு, நீலப்படை அணியொன்றுக்காக புதிய அரசியல் பயணமொன்றுக்கு நீங்கள் ஆயத்தமா?
இளைஞனர் சமூதாயத்தை முன்னேற்றுவது அவசியம். ஒன்றிணைந் எதிரணி, தற்போது இளைஞர்களை ஒன்றிணைத்து தமைத்துவத்தை வழங்கிக்கொண்டுள்ளது.
கேள்வி: இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13+ அமுல்படுத்துவதாக இந்தியாவிடம் கூறினீர்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இப்போது உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: அனைத்து சமூகங்களின் நலன்களும் பேணப்படுகின்ற அரசியல் தீர்வு தொடர்பில் நான், தொடர்ந்தும் உறுதியாக உள்ளேன்.
(இந்தக் கேள்வி, தமிழில் கேட்கப்பட்டது. தமிழிலேயே அவர் பதிலளித்தார்.)
கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வரும் போது நிதிக்குற்றப்புலனாய்வு தொடர்பான நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்.
பதில்: தற்போதுள்ள முறையற்ற நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவை அகற்றிவிட்டு, முறையான அமைப்பொன்றை உருவாக்கி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பேன்.
கேள்வி: இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம், உங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்திருக்கின்றமை மகிழ்ச்சி. உங்களது எதிர்கால அரசாங்கத்தில், தீவிரப் போக்குடையவர்களுக்கு இடமில்லை என்பதற்கு, நீங்கள் என்ன உத்தரவாதத்தை வழங்க முடியும்?
பதில்: தீவிரப்போக்கை நாம் எப்போதும் அனுமதித்ததில்லை, எதிர்காலத்திலும் அனுமதிக்கப் போவதில்லை. இலங்கையில் இனங்களுக்கிடையிலான இணக்கத்துக்கு, நாம் எப்போதுமே ஆதரவளிக்கிறோம்.
கேள்வி: 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவையே, ஶ்ரீ.ல.சு.கவின் வேட்பாளராக, அக்கட்சி அமைச்சர் முன்மொழிந்துள்ளனர். நீங்கள் எதிர்த்துப் போட்டியிடுவீர்களா?
பதில்: இலங்கையின் எதிர்காலத் தலைவர் உருவாகி, இந்த நாட்டை முன்கொண்டு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என நான் நம்புகிறேன்.
கேள்வி: உங்களுடைய காலத்திலும் தற்போதைய காலத்திலும், கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாகச் சிறியளவு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் உங்கள் பார்வை என்ன?
பதில்: எவ்வாறான அபிவிருத்தி மேற்கெள்ளப்பட்டுள்ளது என்பதை, சுற்றும், உங்கள் சொந்தக் கண்களைக் கொண்டு பாருங்கள். எது எவ்வாறிருந்தாலும், முரண்பாட்டின் பின்னர் நாம், மீளக்கட்டியெழுப்பிக் கொண்டிருந்தோம். அதற்கு, நேரச் சட்டகமொன்று இருந்தது.
கேள்வி: சீனாவுக்கான உங்கள் இறுதி விஜயத்தின் நோக்கம் என்ன? நீங்கள் என்ன உத்தரவாதத்தை வழங்கினீர்கள், சீனா எதைக் கோரியது?
பதில்: இலங்கையின் நண்பனாக, சீனா எப்போதும் இருந்துவந்துள்ளது. அவர்களின் ஆதரவை நாம் மதிக்கிறோம். மக்களை வெளியேற்றாமல், சூழலைப் பாதிக்காமல், முன்னைய ஒப்பந்தங்களுக்கு ஏற்பட செயற்றிட்டங்களை அமுல்படுத்துங்கள் என்பதே எனது கோரிக்கை.
கேள்வி: ECTA ஒப்பந்தத்துக்கு, உங்களினதும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினதும் எதிர்வினை என்ன?
பதில்: நாம் அதற்கு எதிராக உள்ளோம். ஏற்கெனவே காணப்படும் ஒப்பந்தங்களில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்காமல், இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பை நாம் ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது.
கேள்வி: இந்த அரசாங்கத்தில் இருந்துகொண்டு, போர் நாயகர்களைத் தாக்குபவர்கள், என்றோ ஒரு நாள் நீதியின் முன் கொண்டுவரப்படுவார்கள் என நம்புகிறோம். அவர்களுக்கு அது மேற்கொள்ளப்படும் என்பதற்கு நீங்கள் உறுதியளிக்க முடியுமா?
பதில்: சட்டத்தை யாராவது துஷ்பிரயோகம் செய்திருந்தால், நீதிக்கு முன்னால் அவர்கள் கொண்டுவரப்படுவர்.
கேள்வி: பௌத்தர்களின் காவியுடைகள், அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனவா? இப்படிக் காணப்படும் விமர்சனத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: தேசிய நெருக்கடியொன்று ஏற்படும் போது, மதத்தலைவர்கள் முன்வருவதென்பது, வரலாற்றுரீதியான ஒன்று. அதற்கும் அரசியலுக்குமிடையில் சம்பந்தம் கிடையாது.
கேள்வி: ஹம்பாந்தோட்டையிலுள்ள விவசாயக் காணிகளை விற்பதற்கு எதிரானவர் என நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வாறாயின், சம்பூர் நிலத்தை வெளிநாட்டவர்களுக்கு ஏன் வழங்கினீர்கள்?
பதில்: நுரைச்சோலை போல சம்பூரும், இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான செயற்றிட்டம். அது, இந்தியாவால் நிர்மாணிக்கப்படவிருந்தது. எந்தக் காணியையும் நாம் விற்கவில்லை.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago