2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘அம்மா’வின் கைரேகைக்கு மருத்துவர்கள் விளக்கம்; கையெழுத்தில் மர்மம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த இலண்டன் வைத்தியர் றிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள், ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹொட்டல் ஒன்றிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று இடம்பெற்றது.  

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, வைத்தியர்களும் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தவர்களும் அளித்த பதில்களினால், ஊடகவியலாளர் சந்திப்பில் சற்று பரப்பரப்பு ஏற்பட்டது.  

கேள்வி நேரத்தின் போது, கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.இ.அ.தி.மு.க) வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்குவதற்கான படிவத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கையெழுத்துக்கு பதிலாக கைரேகையே பதிவு செய்திருந்தார்.  

எனினும், இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் அ.தி.மு.கவை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று, அதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், அவர் கையெழுத்திட்டிருந்தது எப்படி என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.  

இக்கேள்விக்கு மருத்துவர் பாலாஜி பதிலளிக்கையில், “ஜெயலலிதாவின் கைகளில் வீக்கம் இருந்தது. இதனால் ஜெயலலிதாவினால் கையெழுத்திட முடியாததால் பெருவிரல் ரேகை வைத்தார்” என்றார்.  

“கட்சிச் சின்னம் தொடர்பான ஆவணத்தை நான், ஜெயலலிதாவிடம் படித்துக் காண்பித்தேன். ஜெயலலிதா ஒப்புதல் அளித்த பின்னர்தான் கைரேகை பெறப்பட்டது. ஜெயலலிதாவின் கைரேகை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது. கைரேகை வைக்கும்போது என்னோடு பேசினார்’’ என்று கூறினார்.  

நவம்பர் 12 ஆம் திகதியன்று வெளியான இந்த அறிக்கைதான் ஜெயலலிதா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் பெயரில் வெளிவந்த முதல் அறிக்கையாகும். முதலில் வெளியிடப்பட அறிக்கையில் கையெழுத்து இல்லை. ஆனால், சிறிது நேரத்தில் கையெழுத்துடன் அறிக்கை வெளிவந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் படிவத்தில் கைரேகை இருந்தது. அப்படியிருக்கையில் அறிக்கையில் மட்டும் எப்படி கையெழுத்து இருந்தது என வினவினர்.  

இக்கேள்விக்கு மருத்துவர்கள் விளக்கம் அளிக்கவில்லை.  

“சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “தீவிர சிகிச்சையில் இருந்தவரின் புகைப்படத்தை வெளியிடமாட்டோம். ஏன், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒருவரை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?’’ என்றார் றிச்சர்ட்.  

மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் சி.சி.டி.வி கமெரா இல்லை என்றும், அதனால் புகைப்படம் எடுக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

“தீவிர சிகிச்சைபிரிவில்தான் சி.சி.டி.வி கெமரா இல்லை என்கின்றீர்கள். ஜெயலலிதா குணமடைந்து நவம்பர் 19ஆம் திகதியன்று தனி விடுதிக்கு, அதாவது சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டார் என்ற செய்தி வந்ததே. அந்த விடுதியிலுமா சி.சி.டி.வி கமெரா இல்லாமல் இருந்தது? அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ளவரின் புகைப்படத்தை வெளியிட முடியாது என்றால், குணமடைந்து தனி விடுதியில் இருந்தபோது ஜெ.வின் புகைப்படத்தைக் காண்பித்திருக்கலாமே? ஏன் அதைச்செய்யவில்லை?” என்று வினவினர்.  

இந்தக் கேள்விக்கு, மருத்துவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X