2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, இவ்வாண்டுக்குள் கைச்சாத்திடுவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இவ்வாண்டு மேயில், சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்குத் தெரிவித்துள்ளார்.  

இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள், பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்தில், சனிக்கிழமையன்று இடம்பெற்றன. இதில் உரையாற்றும் போதே, இக்கருத்தை தூதுவர் வெளிப்படுத்தினார்.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் அதற்கு அருகில் மாபெரும் தொழில்நுட்ப வலயமொன்றை உருவாக்கவும், இலங்கை அரசாங்கமும் சீனாவும், கடந்தாண்டு முடிவில், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருந்தன. இதற்காக, உள்நாட்டில் எதிர்ப்பும் ஏற்பட்டிருந்தது.  

எனினும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் குறித்து நம்பிக்கை வெளியிட்ட தூதுவர் கருணாசேன, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து நம்பிக்கை வெளியிட்டார்.  

“சீனாவைப் பொறுத்தவரை, எங்களுடைய வர்த்தக உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு இதுவாகும். ஆகவே அதை நினைவுபடுத்துவதற்காக சிறந்த முறையாக, சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவது காணப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.  

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திலும் விமான நிலையத்திலும் இதுவரை சுமார் 2 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைச் செலவுசெய்துள்ள சீனா, புதிய பட்டுப் பாதையொன்றை உருவாக்குவதற்காக, மேலும் பணத்தைச் செலவிடுவதற்குத் தயாராக இருக்கிறது. ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரையும் அதைத் தாண்டியும், உட்கட்டமைப்புகளிலேயே, அதிக பணத்தைச் செலவிடுவதற்கு, அந்நாடு முயல்கிறது.  

மே மாதம் பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ள இது தொடர்பான மாபெரும் மாநாட்டிலேயே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக, தூதுவர் தெரிவித்தார். சுமார் 20 வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்வர் என சீனா தெரிவிக்கின்ற போதிலும், பிலிப்பைன்ஸ் பிரதமர் றொட்ரிகோ டுட்டேர்ட்டே தவிர, வேறு யார் கலந்துகொள்வர் என்ற விடயத்தை உறுதிப்படுத்துவதற்கு, சீனா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.  

இதேவேளை, ஹம்பாந்தோட்டையிலுள்ள முதலீட்டு வலயத்துக்குக் காணப்படும் எதிர்ப்புத் தொடர்பில், சீனா கரிசனை கொண்டுள்ளமையை, தூதுவர் கருணாசேன ஏற்றுக் கொண்டார். எனினும், இந்த எதிர்ப்புகளில் ஈடுபடுபவர்கள், சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “சிறிய குழுவொன்றிடமிருந்து வரும் எதிர்ப்புக்கு மத்தியிலும், இந்த விடயத்தில் அரசாங்கம், முன்னோக்கிச் செல்லும்” என்று அவர் குறிப்பிட்டார்.  

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில், சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்படுகின்ற போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படாது என்பதையும், தூதுவர் கருணாசேன, திட்டவட்டதாகத் தெரிவித்தார்.  

“ஏனைய நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், துறைமுகமானது இராணுவ நடவடிக்கைகளாகப் பயன்படுத்தப்பட முடியாது என்பதை, (சீன) முதலீட்டாளருக்கு, இலங்கை அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் கவடார் துறைமுகம், சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளமையையே, “ஏனைய நாடுகள்” என, தூதுவர் விளித்தார் என்று கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X