2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘ஜெனீவா அழுத்தங்களை சமாளிப்பதற்கே புலி நாடகம்’

Thipaan   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்  

‘தமிழ் மக்களை, அரசாங்கம் தொடர்ந்தும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறதா” என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “ஜெனீவாவில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிப்பதற்கு புலிகள் மீண்டும் மீளெழுகின்றனர் என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா” என்றும் வினவியது.  

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கிகரிப்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கூட்டமைப்பு எம்.பியான சிறிதரன் மேற்கண்டவாறு வினவினார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செல்லும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எப்பொழுதும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் பின்தொடர்வார்கள்.  

இவ்வாறான நிலையில் சுமந்திரன் எம்.பியைப் படுகொலை செய்வதற்காக கிளைமோர். குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை முன்னாள் போராளிகள் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் வினவினார்.  

இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றி பயங்கரவாதத்  தடுப்புச் சட்டத்தைத் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் விரும்புகிறதா, தமிழ் மக்களின் கைகளுக்கு விலங்கிடாமல் மக்களை திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருக்க விரும்புகிறதா?  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்து விசாரணை நடத்தப்படும் என, உறுதிமொழி வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களாகியும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையால் ஜெனீவாவில் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால் ஏற்படக்கூடிய அழுத்தங்களைத் திசை திருப்புவதற்கு அரசாங்கம் கிளைமோர் நாடகங்களை ஆரம்பித்துள்ளதா?  

ஜெனீவா அழுத்தத்தை குறைப்பதற்காக மீண்டும் புலிகள் வந்துவிட்டனர், ஆயுதங்கள் வைத்துள்ளனர், எனவே இராணுவத்தினரைத் தொடர்ந்தும் பேணவேண்டும், தமிழ் மக்கள் கைவிலங்கிடப்படாத திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகளாக வைத்திருக்கப்பட வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறதா என்றும் கேள்வியெழுப்பினார். சுமந்திரன் எம்பியின் கொலைமுயற்சியில் காணப்படும் பின்னணி மற்றும் அது தொடர்பான தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X