2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'58 நிபந்தனைகள் என்பது ​பொய்யாகும் '

Kogilavani   / 2017 ஜனவரி 19 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்காகவே, மனித உரிமைகள் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இந்த அமைச்சரவை பத்திரம் நேற்று (செவ்வாய்க்கிழமை (17)) அமைச்சரவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், GSP+ வரிச்சலுகை கடந்த வாரமே கிடைத்து விட்டது. அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. சலுகையை பெறுவதற்காக 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது பொய்யாகும்” என  அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (18) இடம்பெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.

“ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் வரிச்சலுகையை பெறுவதற்காக யுத்தக் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினரைக் கைதுசெய்தல் உள்ளிட்ட 58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அது​தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?” என்று ஊடகவியலாளர்கள் ​கேள்வியெழுப்பினர்.

அதற்கு அமைச்சர் ராஜித பதிலளிக்கையில்,

“58 நிபந்தனைகள் என்பது பொய். ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்  அவ்வாறு குற்றஞ்சாட்டினால், 58 நிபந்தனைகளும் என்னவென்று கூறட்டும். இராணுவ வீரர்கள் யுத்தக் கடமையைத் தவிர்த்து கொலை உள்ளிட்ட தவறுகளைச் செய்திருந்தால் அவர்களைக் கைதுசெய்ய வேண்டும். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் லசந்த விக்கரமதுங்க கொலைச் சம்பவத்திலும் இதனையே செய்தோம்.

இதில் மூன்று பிரதான விடயங்கள் உள்ளன. முதலாவது மனித உரிமைகளை வென்றெடுத்தல். இரண்டாவது நல்லாட்சி, மூன்றாவது நிலையான அபிவிருத்தி. இவை மூன்றையும் யாராவது எதிர்ப்பார்களா? இவை மூன்றுமே மனித உரிமை செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்ட்டுள்ளன. கடந்த அரசாங்கத்துக்கு அதனை செய்ய முடியவில்லை.

அவர்கள், மனித உரிமைகளை வென்றெடுப்பதற்கு எதிராக இருந்தனர். இது எங்கள் உரிமை, உலக உரிமை இல்லை என்று கூறினார்கள். நல்லாட்சி என்பதும் அவர்களிடம் இருக்கவில்லை. அதற்கும் அவர்கள் எதிராகவே இருந்தனர். அபிவிருத்தி என்பது மாத்திரம் சிறியளவில் இருந்தது” என்றார்.

“புதிய அரசியலமைப்பின் ஊடாக இராணுவ வீரர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை என்றும் அத்துரலிய ரத்ன தேரர்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாரே?” என, ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், “இப்போது கருத்து வெளியிட அனைவரும் சுதந்திரம் உள்ளது. இவர்கள் தமது கருத்தைத் தெரிவிக்க முடியும். புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதற்குள் அது தொடர்பில் தவறாகக் கதைக்கின்றனர். சகல கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றுதான் நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக்கினோம்.

இவ்வாறான கருத்தை, தான் தெரிவிக்கவில்லை என்றும் பத்திரிக்கைகள் தான் இவ்வாறு தெரிவித்தன. 'நான் ஹெல உறுமையில் இல்லை, சுயாதீனமாகிவிட்டேன் என்று மாத்திரமே கூறினேன்' என்று, அத்துரலிய ரத்ன தேரர் என்னிடம் கூறினார்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .