2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'பொருட்களின் விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரிப்பு'

Niroshini   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

அரிசி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை, இதுவரை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். “மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட, பொருட்களின் விலைகள் ரொக்கட் வேகத்தில் உயர்கின்றன” எனவும் அவர் குறிப்பிட்டார். 

புஞ்சிபொரளையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், 

“இன்று, அரிசி விலை குறித்தே பரவலாகப் பேசப்படுகிறது. அரிசிக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையைப் பார்க்கும் போது, அரிசி வகைகளுக்கான விலை, 100 ரூபாய்க்கு மேல் உள்ளது. இது, பெரும் அநீதியாகும். நிதி அமைச்சுக் கொடுத்த அழுத்தம் காரமாகவே, நுகர்வோர் விவகார அதிகாரசபை, விலையை அதிகரித்துள்ளது.  

“இவ்வாறு அதிகரிக்கப்பட்ட விலை தொடர்பான எவ்விதத் தகவலும் உள்ளடங்கிய வகையிலான வர்த்தமானி வெளியிடப்படவில்லை. இதனால், இதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியாத நிலை காணப்படுகிறது. நீதியான முறையில் அரிசி விலை நிர்ணயிக்கப்படவில்லை. 

“கடந்த ஆட்சிக் காலத்தில், அரிசிக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவிய காலத்திலும், அரிசிக்கான விலையை 100 ரூபாய்க்கு மேல் உயர்த்தவில்லை” என்றார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனது ஆட்சி காலத்தில் ஐம்பெரும் பிரச்சினைகளை அடக்கிக் காத்தவராவார். அதாவது, சுனாமியால் ஏற்பட்ட அழிவை ஈடுகட்டுவதற்காக முகங்கொடுத்த பிரச்சினை, பஞ்சம், கடன் சுமை, ஸ்திரமற்றுப் பொருளாதாரம் இருந்த நிலையில் அதை நகர்த்துவதற்காக முகங்கொடுத்த பிரச்சினை, தமிழீழ விடுதலைப் புலி இயக்க இராச்சியத்தைத் துவம்சம் செய்தமை ஆகியனவே அவை. இவர், இலங்கையின் மாவீரனாவார்.  

“அண்மையில், மல்வத்து பீட மகாநாயக்க தேரரைச் சந்தித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வரியைக் குறைத்து மக்களின் சுமையை நீக்குவதாக வாக்குறுதியளித்தார். அவர் அளித்த வாக்குறுதி எங்கே போய்விட்டது? 

“முடியுமானால், ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் நோயாளிகளுக்கு, லொத்தர்சீட்டு விற்பனையாளர்களுக்கு, கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு மற்றும் சதொசவுக்கு விதிக்கப்பட்ட வரியை நீக்கிக் காட்டுங்கள். அப்போது, நீங்கள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்கள் என்று நாம் நம்புகிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X