2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

“வர்த்தமானியை வெளியிடக்கூடாது”

Niroshini   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

“காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது” என, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  

புஞ்சிபொரளையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயெ அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“நுரைச்சோலை வேலைத்திட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ, 15 பில்லியன் ரூபாய் தரகுப் பணமாக (கொமிசன்) எடுத்துக் கொண்டதாக, சீனத் தூதுவர் தன்னிடம் குறிப்பிட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விடயமாகும். இக்கருத்தை, சீனத் தூதுவராலயம் மறுத்துள்ளது. ஒரு முன்னாள் ஜனாதிபதியாக இருந்துகொண்டு இவ்வாறு பொய்க் கருத்துகளை முன்வைத்து வருவது, அவரது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்.  

“இந்த அரசாங்கத்தில் பகல் கொள்ளையர்கள் இருக்கின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க, தயக்கம் காட்டி வருகின்றார்.  

“2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், கொள்ளையடித்த பணங்கள் எல்லாம் வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்ட நிலையில், விசாரணைக்காக இனி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பதில் என்ன பிரயோசனம் இருக்க போகிறது?  

“பிரச்சினை என்று வந்தால் மக்கள் வீதிக்கு இறங்குவது இயல்பானதே. இதை யாரும் விமர்சிக்க முடியாது.  

“பிரச்சினைகள் கைவிட்டுப் போகும் முன்னர், இதற்கான தீர்வுகளைக் காண வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். பிரச்சினைக்குப் பிரச்சினை குவிந்து காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்த முயற்சிக்குமான சமிக்ஞையும், அரசாங்கப் பக்கத்தில் இருந்து தெரியவில்லை” என்றார்.  

மேலும், “மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி காலத்தில், வடக்கில் புலிகளை தோற்கடித்து அற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன, சர்வதேச அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன, குறிப்பிடட்ட சில தனிநபர்களுக்கும் நாட்டுக்கு பிரவேசிக் தடை விதிக்கப்டபட்டது. ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டது. இதனால், சர்வதேச தலையீடுகள் சுதந்திரமாக செயற்படுகின்றன” எனவும் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X