2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘வாய்ப்பை தவறவிட்டுவிட்டது வடமாகாண சபை’

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

“வட மாகாணசபையில், நான் குறைபாட்டைக் காண்கின்றேன். அதிகமாக அதிகாரம் வேண்டுமென நீங்கள் கேட்கின்றீர்கள். அது நியாயமானதுதான். ஆனால், வழங்கிய அதிகாரங்களை கூட, சரியான நேரத்தில் வட மாகாணசபை பயன்படுத்தியதாக இல்லை” என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.  

வவுனியா மத்திய பஸ் நிலையத்தை நேற்று (16) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இராணுவத்திடம் இருந்த பல காணிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால், விடுவித்துத் தரப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகளில், ஏதாவது பயன்தரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா” என்றும் அமைச்சர் வினவினார்.

அனைத்து மாகாணங்களிலும் கூட மாகாணங்களுக்கிடையிலான செயற்றிட்டங்களை கொண்டு வந்து செயற்படுத்துகின்றனர். வட மாகாண சபைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, வட மாகாண சபைக்கு பாரிய பொறுப்புள்ளது. இந்த மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்யவேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கி கொடுக்கவேண்டும்.

வட மாகாண சபைக்கு தேவையான அத்தனை விடயங்களையும் நாம் நிறைவேற்றி தருவோம். அதற்குத் தயாராக இருக்கின்றோம். இந்த மேடையிலும் அனைத்து கட்சியினரும் இருக்கின்றார்கள். இது மக்களின் சேவைக்காக ஒன்றுபட்டுள்ளோம். ஆனால், தேர்தல் காலங்களில் பிரிந்திருந்து தேர்தலில் போட்டியிடுவோம்.

வடக்கு- கிழக்கு ஒரு காலகட்டத்தில் பிரிக்கப்பட்டது மாத்திரமல்லாது போர்ச்சூழலும் காணப்பட்டது. அது அதிகாரத்தை பகிர்வது தொடர்பானதாக இருந்தது.

போக்குவரத்து துறையிலும் தமது அதிகாரத்தை காட்டுவதற்காக சிலர் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .