2025 மே 07, புதன்கிழமை

கந்தூரியின் போது கடைத்தொகுதி அமைப்பதாயின் நகர சபையின் அனுமதியைப் பெறவும்

Editorial   / 2018 மே 02 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, மாஞ்சோலைச் சேனையில் கந்தூரி நடைபெறவிருப்பதையிட்டு, அப்பகுதியில் கடைத் தொகுதிகள் உட்பட ஏனைய அதனுடனான விடயங்களை செய்கின்ற போது, கிண்ணியா நகர சபையின் அனுமதியைக் கட்டாயமாகப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா நகர சபை மண்டபத்தில், நேற்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமால் விடுக்கப்பட்ட விசேட அறிக்கையின் ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம், ஏப்ரல் 27ஆம் திகதியிடப்பட்ட சபைத் தீர்மானத்துக்கு அமைவாகவும் தவிசாளர் தலைமையில் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நகர சபையின் கேட்போர்கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

உலமா சபை, சூரா சபை தலைவர், உலமா சபை செயலாளர், பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர், கிண்ணியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன், மேலும் சில தீர்மானங்களும் இதன்போது நிறைவேற்றப்பட்டன.

கலாசாரச் சீர்கேடுகள் இடம்பெறாத வண்ணம் நிகழ்வுகளை நடத்துதல் வேண்டுமெனவும், ஒவ்வொரு கடைத்தொகுதிக்கும் அனுமதிக் கட்டணமாக 5,000 ரூபாயை நகர சபையில் செலுத்தி, பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமைக்கு (05) முன்னர், நகர சபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​மேலும், அனுமதிக் கட்டணம் செலுத்தாமல் அமைக்கப்படும் கடைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாடுகள் அறுப்பதாயின், உரிய முறையில் அனுமதிக் கட்டணம் செலுத்தி, நகர சபையின் அனுமதியை, இறுதித் திகதியான நாளை (03) பெற்றுக் கொள்ளல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X