2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘சகல வசதிகளையும் வழங்க வேண்டும்’

வடமலை ராஜ்குமார்   / 2018 மே 22 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தப் பாதிப்புக் காரணமாக, நாட்டில் இருந்து வெளியேறி, மீளத் திரும்பியவர்களுக்கான சகல வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென, எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அம்மக்கள் இயல்பு வாழ்வுக்கு வரக்கூடியதான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில், மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நேற்று (21) மாலை இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, “கடந்த கால யுத்தத்தின் போது, உள்ளூரிலும் இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்த பொதுமக்கள், மீளத் தமது சொந்த இடங்களுக்கு வருகை தருகின்றனர். இம்மக்களை மீள, அவர்களின் இயல்பு வாழ்வுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கும் அரச அதிகாரிகளுக்கும் உள்ளது.
“எனவே, இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

“அத்துடன், அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை, அவர்கள் துப்பரவு செய்து குடியேறுவதற்கு, வன பரிபாலன திணைக்களமும் வன ஜீவராசிகள் திணைக்களமும் பல்வேறு விதத்தில் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
“எனவே, அம்மக்கள் குடியேறும் போது, அப்பகுதியில் அவர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பின், அந்த இடங்களை விடுவித்து, அவர்களை உடனடியாக அப்பகுதியில் மீளக்குடியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

மீள் குடியேறும் மக்களுக்கான குடியிருப்பு வசதிகள், அடிப்படைத் தேவைகள் உள்ளிட்டவற்றை, அரச அதிகாரிகள் பூரத்தி செய்ய வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரினார்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அப்துல்லா மஹ்ரூப் எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், கட்சிகளின் அமைப்பாளர்கள், அரச உயரதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X