Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 12 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து க.திருச்செல்வம் இராஜினாமாச் செய்துள்ளார்.
கடந்த வருடம் மூதூர் பிரதேச சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களில் கூடுதல் வாக்குகளைப்பெற்ற க.திருச்செல்வம் சபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே இராஜினாமாக் கடிதத்தை மூதூர் பிரதேச சபையின் தலைவரிடம் கையளித்திருப்பதாக க.திருச்செல்வம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மூதூர் பிரதேச சபைக்கான தேர்தலில் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ் மக்களின் அதிகளவான வாக்குகளுடன் வெற்றி பெற்று மூதூர்ப் பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் மக்களுக்காக கடந்த ஒரு வருட காலப் பகுதியில் என்னால் முடிந்தளவு சேவையினை மக்களுக்கு வழங்கியுள்ளேன்.
எமது பிரதேசங்களிலே உள்ள இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம் அவர்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கும் நோக்கிலும் தேர்தலில் போட்டியிட்டு அடுத்த நிலையிலிருக்கும் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்குவதனூடாக அவர் சார்ந்த மக்களும் எமது கட்சியின் மீது அசையாத நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நோக்கிலும் பதவிகள் எமது மக்களின் நலன்களை மேம்படுத்தவேயன்றி எம்மை வளர்ப்பதற்கல்ல என்ற கோட்பாட்டின் அடிப்படையிலும் எனது பிரதேச சபை உறுப்பினர் பதவியினை கடந்த 09.03.2012 அன்று இராஜினாமாச் செய்துள்ளேன்.
எனக்கு இச்சந்தர்ப்பத்தினை வழங்கிய மூதூர்ப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு மீண்டுமொருமுறை நான் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் புதிதாக தெரிவுசெய்யப்படும் எமது கட்சியின் உறுப்பினருக்கும் தொடர்ந்தும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என அன்பாக வேண்டி நிற்கின்றேன்.
மூதூர் பிரதேச சபையில் எமக்கு சிறப்பான ஒத்துழைப்புக்களை வழங்கிய தலைவர், உபதலைவர் மற்றும் சக பிரதேச சபை உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்னமும் மீளக்குடியேறாமல் நலன்புரி முகாம்களிலே தங்கியிருந்து சொல்லொணாத் துன்பங்களை தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, நவரெத்தினபுரம் மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கு எமது கட்சி எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் என இச்சந்தர்ப்பத்திலே உறுதியளிக்கின்றேன்.
எமது மக்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக எமது கட்சியானது எமது தலைவர் சம்பந்தன் தலைமையில் முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று எமது கட்சிக்கு பலம் சேர்ப்பதோடு எமது கட்சியின் பின்னால் அணிதிரள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்.
நான் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் எமது கட்சியின் நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் தீவிரமாக செயற்படவுள்ளேன் என்பதனையும் எமது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago