2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அனைவரும் சமவுரிமையுடன் வாழ அனுமதிப்பதில் என்ன தவறுள்ளது?: திருமலை வேட்பாளர் தண்டாயுதபாணி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரமன்)

அனைவரையும் சமவுரிமையுடன் வாழ அனுமதிப்பதில் என்ன தவறு உள்ளது. ஏன் அதனை பெரும்பான்மையின அரசாங்கம் வழங்குவதற்கு மறுக்கின்றன என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை  மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இந்த நாட்டில் உரிமையுள்ள இனமாக தமிழர்களாகிய நாம் வாழவேண்டும். இந்த நாட்டில் சிங்கள மக்கள் என்ன உரிமைகளுடன் வாழ்கின்றார்களோ அந்த உரிமையை எங்களுக்கும் தாருங்கள் என்றுதான் ஆரம்பத்தில் தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள். அப்போது எந்த தமிழ்த் தலைவர்களும் தனிநாட்டையோ, தனித்தமிழீழத்தையோ கேட்கவில்லை. சமவுரிமையை மட்டுமே கேட்டார்கள். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

இந்தத் தேர்தல் ஒரு உரிமைப் போராட்டம். ஆயுதம் தூக்கியது மட்டும்தான் போராட்டம் என்று இல்லை. வாக்குச்சீட்டை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்த அரசாங்கத்தை தோற்கடிக்கவேண்டும். வாக்குச்சீட்டு என்பது உயிருடைய ஆயுதம். அது வெறும் வெற்றுக்காகிதம் அல்ல.

அரசாங்கம் தனது தேவைக்காகத்தான் இந்தத் தேர்தலை நடத்துகின்றது. தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை. எனவே இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவை இந்தத் தேர்தலில் சிங்களப் பெரும்பான்மையினத்திற்கும் சர்வதேசத்திற்கும் உரத்து சொல்லச் வேண்டும். இது எங்கள் உயிர் பிரச்சினை. இது எங்கள் உரிமைப் பிரச்சினை.

எமது நிலம் எமது பிரதான உரிமை. அதனை இழந்து விடமுடியாது. மக்களின் உரிமைகள் நசுக்கப்படும்போது கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள். சம்பூர் மக்களின் காணிகளுக்கு இப்போது என்ன நடந்துள்ளது என்று எமக்கு தெரியும். ஆனால் இந்த பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாணசபையில் இருந்தவர்கள் எதனையுமே செய்யவில்லை என்பதும் எங்கள்; அனைவருக்கும் தெரியும். அவர்கள் தமிழர்களின் உரிமைகள் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளையும் மாகாணசபை ஊடாக செய்யவில்லை' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .