2025 மே 08, வியாழக்கிழமை

தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்: சம்பந்தன்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 01 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகத்தெரிவு செய்யப்பட்டால் அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் ஆதரவளிக்கும். அதுபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் கட்சியாக வெற்றியீட்டினால் அது ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பெருந்தன்மையாக தாராளமாக விட்டுக்கொடுத்து முஸ்லிம் மக்களுடன் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராக இருக்கின்றது என்றும் சம்பந்தன் திருகோணமலைக்கு வடக்கே உள்ள புல்மோட்டை என்ற முஸ்லிம் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்திலிருந்து போட்டியிடும் புல்மோட்டையைச் சேர்ந்த சின்னமரைக்கார் பளீல் மற்றும் முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி ஆகியோரும் கூட்டத்தில் பங்குபற்றினர்.

சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது:-

'புல்மோட்டை என்ற பெயரை கனிஜபுர என்று ஜெயவர்த்தனா அரசாங்கம் மாற்றியபோது அதனை எதிர்த்து ஜெயவர்த்தனாவிடம் முறையிட்டேன். அதனை அடுத்து கனிஜபுர என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. அதுபோன்று திருகோணமலை நிர்வாக மாட்டத்தின் கீழ் இருந்த புல்மோட்டையை அநுராதபுரம் நிர்வாக மாவட்டத்தின் கீழ் கொண்டு வந்தபோது நான் அதனை எதிர்த்தேன். அதனைத் தொடர்ந்து புல்மோட்டை மீண்டும் திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

புல்மோட்டை முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு உரித்து உண்டு. புல்மோட்டை முஸ்லிம் மக்கள் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வாக்களிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசஸுக்கு வாக்களிக்க வேண்டும். எக்காரணங்கொண்டும் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் கட்சியாகத் தெரிவு செய்யப்படுமிடத்து அதற்கு ஆதரவளித்து ஆட்சி அமைக்க உதவும்படி முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக தெரிவு செய்யப்பட்டால் அது ஆட்சி அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் உதவும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையேயான உறவு மகிவும் நெருக்கமாக வளரவேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணுவதற்கான சந்தர்ப்பம் உருவாகிவருகின்ற போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பிரிந்து நின்று செயல்பட முடியாது. இரு இனங்களும் ஒற்றுமையாக உறுதியுடன் செயற்பட்டு எதிர்வரும் தேர்தலில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்'- என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • Arooz Sunday, 02 September 2012 08:45 AM

    பிரமாதமான கருத்து. சந்தோசமாக இருக்கிறது. இந்த இன நல்லுறவு தலைக்குமானால் தமிழ் - முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் நிச்சயம் தீர்க்கப்பட்டுவிடும். இப்படியான ஒற்றுமை நிகழ இறைவனைப் பிரார்த்திப்போம்.!

    Reply : 0       0

    Haniff Monday, 03 September 2012 07:21 AM

    இப்படி ஓர் உணர்வை, சிந்தனயை காலம் தாழ்த்தியாவது கொடுத்த இறைவனுக்கு முதட் கண் நன்றிகள். தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப்ஃபினால் ஆரம்பிக்கப்ப்ட்ட யோசனை ( தமிழ் அரசுக்கட்சியில் இருந்த‌ போது ) செவ்வனே நிறைவேற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுவோமாக !
    இந்த முடிவால் மேலிடத்தை நினைக்க கவலையா இருக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X