2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில் பேரணி

Kogilavani   / 2013 மார்ச் 20 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.எச்.அமீர்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியும் ஆதரவும் தெரிவித்தும் சம்பூர் மக்களை மீளக் குடியமர வலியுறுத்தியும் மூதூரில் இன்று ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.

சம்பூரையும் அதனைச் சுற்றியும் உள்ள கிராமங்களில் வாழ்ந்து இப்பொழுது கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைப்பறிச்சான் முகாம்களில் அகதிகளாக வாழும்  மக்களே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியும் ஆதரவும் தெரிவித்து இந்த ஊர்வலத்தில்  கலந்துகொண்டனர்.

இதன்போது, ஊர்வலம் மூதூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியிலிருந்து ஆரம்பித்து மூதூர் பிரதேச செயலகம்வரை சென்றது.

ஊர்வலத்தின் முடிவில் பிரதேச செயலாளர் என் பிரதீபனிடம் மக்கள் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைப்பறிச்சான் நலன்புரி முகாம்களில் கடந்த ஏழு வருடங்களாக வாழ்ந்து வரும்  நாம் மிகுந்த வேதனையுடனும் எதிர்பார்ப்புடனும் காலங்கழிக்கின்றோம்.

எங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்புவோமா என 1872 குடும்பங்கள் ஏக்கத்துடன் இருந்த வேளையில், நலன்புரி முகாம்களில் உள்ள 139 குடும்பங்களை  ஜனாதிபதி மீளக் குடிமரச் செய்துள்ளார்.

தனது மஹிந்த சிந்தனையின் கீழ் முழு அனுசரணையுடன் முதற் கட்டமாக நவரெத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்தமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து கூனித்தீவு மற்றும் சூடைக்குடாவைச் சேர்ந்த 92 குடும்பங்களைத் தங்களது பூர்வீகப் பூமியில் மீள்குடியேற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட செய்தியானது எமக்கு மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.

இதேபோன்று இன்னமும் நலன்புரி நிலையங்களிலேயே   தமது வாழ்க்கை முடக்கப்பட்டு அல்லற்படும் சம்பூர், கடற்கரைச்சேனைக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களையும் எங்களது சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியமர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X