2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

புல்மோட்டை காணி அளவீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்
, ஏ.எம்.அப்துல் பரீத், வடமலை ராஜ்குமார்

புல்மோட்டை பிரதேச காணிகளை அளவிடுவதில் இருந்த பிரச்சினை குறித்து, பொதுமக்களுக்கும் அரசாங்க உத்தியோகத்தர்ளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்காணிகளுக்கான அளவைகளை மேற்கொள்ளுமாறு கிராம சேவகர்களுக்கும் நில அளவையாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புல்மோட்டை பிரதேச காணிகளை அளவிடுவது தொடர்பாக  செவ்வாய்க்கிழமை (05) விசேட கலந்துரையாடல் ஒன்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், எம்.எஸ்.தௌபீக் எம்.பி, மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர், திருமலை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள், புதைபொருள் திணைக்கள அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த பல வருடங்களாக புல்மோட்டை பிரதேச காணிகளை அளவிடுவதில் பாரிய பிரச்சினைகள் இருந்து வந்தன. ஆகவே, காணிகள் அளவீடு தொடர்பில் இருக்கின்ற சிக்கல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடி அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொண்டு, அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டது. 

காணிகள் அளவீடு செய்யும் போது மக்களுக்கோ அல்லது அவர்களது காணிகளுக்கோ எந்தவித இடையூறும் விளைவிக்கப்பட மாட்டாது, உறுதிப்பத்திரன் இருந்தோ அல்லது இன்றியோ பல வருடங்களாக குறித்த பிரதேச காணிகளில் வசித்து வருபவர்கள் தொடர்ந்து அங்கு வசிக்க முடியும் என்று பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயினால், இதன்போது வாக்குறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, இந்த காணி அளவீடு தொடர்பில் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

இதேவேளை, கடற்படையினரால் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் பலவந்தமாக பிடிக்கப்பட்டிருப்பது குறித்து மாகாணசபை உறுப்பினர் அன்வரால் இக்கூட்டத்தின்போது எடுத்துரைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் மற்றும் அரச அதிபர் ஆகியோர், இப்பிரச்சினை தொடர்பில் தாங்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .