Super User / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது கடைசி சர்வதேச போட்டி ஏமாற்றமாக அமைந்துவிட்டதாக முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி தனது 39 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ள முத்தையா முரளிதரன் நேற்றைய கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்ற வீரர்களில் முரளி மாத்திரமே நேற்றைய போட்டியிலும் விளையாடினார். இப் போட்டியில் காயத்திற்கு மத்தியில் விளையாடிய அவர் 8 ஓவர்கள் பந்துவீசி 38 ஓட்டங்களைக் கொடுத்தார் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை. ஒருநாள் போட்டிகளில் இது பாராட்டுக்குரியதொரு பந்துவீச்சு பெறுதிதான். எனினும் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முரளி இதைவிட சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், "அது ஏமாற்றம்தான். ஏனெனில் எனது பிரதான இலக்கு உலகக் கிண்ணத்தை வெல்வதாகவே இருந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக நாம் அதை சாதிக்க முடியவில்லை. நேற்று எம்மைவிட இந்தியா சிறந்த அணியாக இருந்தது"என கொழும்புக்குத் திரும்பிய பின் முரளி கூறினார்.
"நாம் 274 ஓட்டங்களைப் பெற்றோம் அது சிறந்த ஸ்கோர். மாலிங்க இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அதன்பின் அந்த அணியைஇ குறிப்பாக மத்திய பகுதியை தகர்க்க எம்மால் முடியவில்லை.
சுழற்பந்துவீச்சாளர்கள் போதியளவு விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. அது பிரதான காரணம். நானோ சுராஜோ சில விகெட்டுகளை வீழ்த்தியிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். கிரிக்கெட்டில் இப்படி நடப்பதுதான். இதிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். எனவே எமது அணி எதிர்காலத்தில் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன். 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அவர்கள் இலங்கைக்கு கொண்டு வருவார்கள் என நம்புகிறேன்" என்றார் முரளி.
முரளி முழுமையான உடற்திட நிலையில் இல்லாத போதிலும் அவரை அணியில் விளையாட வைத்த தீர்மானத்தை அணித்தலைவர் குமார் சங்கக்கார ஆதரித்து பேசினார்.
"அவர் எமக்காக சாதிக்காமல் போன அரிதான சில நாட்களில் இதுவொன்றாகும். ஆனால் 100 போட்டிகளில் ஒன்றில் இப்படி நடக்கலாம். அவர் எமது மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவர் பாதி உடற்திடநிலையில் இருந்தாலும் சிறப்பாக இருந்தார். இது ஒரு பிரச்சினை என நான் கருதவில்லை" என சங்கக்கார கூறினார்.
அவரை நாம் இழக்கப்போகிறோம். துரதிஷ்டவசமாக அவருக்கு மாபெரும் பிரியாவிடையை அளிக்க முடியாமல் போய்விட்டது' எனவும் சங்கக்கார கூறினார்.
முரளியின் பந்துவீச்சு தனக்கு பரிட்சயமாகி விட்டதாலேயே உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கான துடுப்பாட்ட வரிசையில் யுவராஜ் சிங்கைவிட தான் முதலில் வந்ததாக டோனி கூறியுள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் முரளியும் டோனியும் சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
"முரளியுடன் நான் அதிகம் விளையாடியுள்ளேன். அவரின் தூஸ்ரா பற்றியும் நன்கறிவேன். அதை அவரும் அறிவார். நான் அவரை அழுத்தத்திற்குள்ளாக்கினேன்" என டோனி கூறினார்.
நியூஸிலாந்துடனான அரையிறுதிப் போட்டியே இலங்கை மண்ணில் முரளி கடைசியாக விளையாடிய போட்டியாகும். அப்போட்டியில் முரளி தனது கடைசி பந்தில் விக்கெட் ஒன்றை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
.jpg)

12 minute ago
20 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
27 minute ago
36 minute ago