2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

’’யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்’’ தினம்...

Editorial   / 2022 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஓகஸ்ட் 5, 2019 ல் இந்தியா மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளைக  நினைவூட்டும் வகையில் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் இன்று (05)  அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்துத்தெரிவித்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபாரூக் பர்கி, இந்தியாவானது அதன் அரசியலமைப்பின் 370 மற்றும் 35A விதிகளை ரத்து செய்வதன் மூலம் 2019 ஓகஸ்ட்  5 முதல் காஷ்மீரில் மேற்கொள்ளும் சட்ட விரோதமான மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளானது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயல் மட்டுமின்றி, சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிப்பதன் மூலம் அதன் சொந்த அரசியலமைப்பையே மீறுகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில், "பாகிஸ்தான் காஷ்மீரிகளுக்கு  எப்போதும் மதிப்பளிக்கிறது. சுயநிர்ணய உரிமைக்கான  காஷ்மீரிகள் நியாயமான போராட்டத்தையும், உறுதியான நம்பிக்கையையும்  பாகிஸ்தான் பெரிதும்  போற்றுகிறது.

பாகிஸ்தான் தனது அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகள்  மூலம் இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து  விழிப்பூட்டிக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் எப்போதும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நிற்பதோடு அவர்களையும்  பாகிஸ்தானியர்களாகவே நோக்கும் என்றார்.

நமது காஷ்மீர் சகோதரர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற உதவுவதற்கு பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்பது நமது தேசிய தீர்மானமாகும்" எனவும் குறிப்பிட்டார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளர் திருமதி அஸ்மா கமால், பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் அல்வியின் இந்நாள் குறித்த  செய்தியையும், ஊடக  இணைப்பாளர் திருமதி கல்சூம் கைசர் பிரதமர் முஹம்மது ஷாபாஸ் ஷரீப்பின் செய்தியையும்  பார்வையாளர்களுக்காக வாசித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .