2025 மே 19, திங்கட்கிழமை

அமீரகத்தை வீழ்த்தி வாய்ப்பை தக்கவைத்தது இலங்கை!

J.A. George   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

டி20 உலக கோப்பை தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன. க்ரூப் ஏ-வில் இடம்பெற்று நமீபியாவிடம் முதல் போட்டியில் தோற்ற இலங்கை அணி, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.

ஜீலாங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்க மற்றும் குசல் மெண்டிஸ் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

மெண்டிஸ் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் நிசாங்காவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்செய டி சில்வா அதிரடியாக ஆடி21 பந்தில் 33 ஓட்டங்களை விளாசி ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதிரடியாகவும் அதேவேளையில் பொறுப்புடனும் ஆடிய பதும் நிசங்கா அரைசதம் அடித்தார். 14 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை அணியை ஒரே ஓவரில் சரித்தார் அமீரக அணியில் ஆடும் தமிழகத்தை சேர்ந்த ரிஸ்ட் ஸ்பின்னர் கார்த்திக் மெய்யப்பன்.

15ஆவது ஓவரை வீசிய கார்த்திக் மெய்யப்பன், முதல் 3 பந்தில் 3 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4வது பந்தில் ராஜபச்சவை(5) வீழ்த்திய கார்த்திக் மெய்யப்பன், 5வது பந்தில் சரித் அசலங்க(0) மற்றும் கடைசி பந்தில் தசுன் ஷனாக(0) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். 

தொடர்ச்சியாக ராஜபக்ச, அசலங்க, ஷனாக ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

டி20 உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 5ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் கார்த்திக் மெய்யப்பன். அதன்பின்னர் இலங்கை அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. 18ஆவது ஓவரில் நிசாங்கா சில பவுண்டரிகளை அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 152  ஓட்டங்களை அடித்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி தொடக்கம் முதலே இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதிலும் அந்த அணியில் சிராக் சூரி(14), அயான் (19), ஜுனைத் சித்திக் (18) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இலங்கை தரப்பில் துஷ்மந்தா சமீர, வநிந்து ஹசரங்க தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் 17.1 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X