Shanmugan Murugavel / 2026 மார்ச் 27 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முருகவேல் சண்முகன்

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரானது, பெங்களூருவில் சண்றைசர்ஸ் ஹைதரபாத்தை நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் சனிக்கிழமை (28) இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்வதுடன் ஆரம்பிக்கின்றது.
முதற் கட்டமான ஏப்ரல் 12ஆம் திகதி வரையிலான போட்டி அட்டவணையே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 19ஆவது ஆண்டாக நடைபெறும் ஐ.பி.எல்லானது இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் இரசிகர்களுக்கு திருவிழாவாகவே அமையப் போகின்றது.
ஈரானியப் போருக்கு மத்தியில் நல்லதொரு கவனப்கலைப்பானாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் இருக்கப் போகின்றது. எவ்வாறெனினும் போர் நீடித்தால் மின்வெட்டுகள் மற்றும் கடலடி கேபிள்கள் தாக்கப்பட்டால் ஏற்படும் தொடர்பாடல் துண்டிப்பு அச்சமும் இருக்கவே செய்கின்றது.
ஆரம்பப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட்டும் தொடர் முழுவதும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாலும் இல்லாத நிலையானது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரானது கிண்ணத்தை தக்க வைப்பதில் நிச்சயம் தாக்கத்தை செலுத்தும். புவ்னேஷ்வர் குமாருடன் இணைந்து ஹேசில்வூட்டை நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபியும் தயாலை புதுமுக இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மக்னேஷ் யாதவ்வும் அணியில் பிரதியிடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அணித்தலைவர் ரஜாட் பட்டிடாரின் அண்மைய போர்மானது கேள்விக்குறியாக இருக்கின்ற நிலையில் இங்கிலாந்தின் சகலதுறைவீரர் ஜேக்கப் பெத்தெல்லின் வரவு அனுகூலமளிக்கிறது. மீண்டுமொரு முறை இந்த றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய வீரராக க்ருனால் பாண்டியா, சுயாஷ் ஷர்மா ஆகியோர் காணப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டைப் போலவே விராட் கோலியின் இனிங்ஸ்கள் முக்கியமானவையாகவே காணப்படுகின்றன.

இந்நிலையில் கடந்தாண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் இம்முறையும் அதே சிறப்பாக கட்டமைக்கப்பட்ட அணியாகக் காணப்படுகிறது. பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங்கின் ஆரம்பத் துடுப்பாட்டம், அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், நெஹால் வதேராவின் மத்தியவரிசை இறுதிக் கட்டத்தில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஷஷாங்க் சிங் ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.
அடுத்து சென்னை சுப்பர் கிங்ஸுடன் அதிக தடவைகளாக ஐந்து தடவைகள் ஐ.பி.எல்லில் சம்பியனாகியுள்ள மும்பை இந்தியன்ஸ் ஆறாவது தடவையாக சம்பியன் மகுடத்தை குறிவைத்து களமிறங்குகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்காத மும்பை இந்தியன்ஸில் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக அணியில் றயான் றிக்கெல்டனை குயின்டன் டி கொக் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வரிசையைப் பொறுத்த வரையில் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மாவுடன் இணைந்து நாமன் திர் பொறுப்பெடுக்க வேண்டியுள்ளது. ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் அணியில் இடம்பெற்றார் அவரும் மத்திய வரிசைக்கு பலம் சேர்ப்பார்.

கடந்தாண்டு இறுதியிடத்தைப் பிடித்த சென்னை சுப்பர் கிங்ஸ், சஞ்சு சாம்சனின் வருகையுடன் மீளெழுமா என்பது சில போட்டிகளில் தெரியும். என்னதான் உணர்ச்சிபூர்வமான மற்றும் வியாபாரக் காரணங்களால் மகேந்திர சிங் டோணி அணியில் இடம்பெற்றாலும் உண்மையில் இன்னொருவரின் இடத்தைப் பிடித்து அணிக்கு பாரமாக கிரிக்கெட் பெறுபேற்று ரீதியில் பலவீனத்தை அளிப்பவராகவே காணப்படுகின்றார். எனினும் இதை எப்போது அவர், அணி நிர்வாகம் உணருமென்பதே மில்லன் டொலர் கேள்வியாக உள்ளது. கூடிய வகையில் இவ்வாண்டுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்கப்படுகிறது.
வயது வந்தவர்களின் கூடாரமாக சுப்பர் கிங்ஸ் இருக்கின்றது என்ற குரல்களுக்கு மத்தியில் பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மாவை பெரும் தொலைக்கு சுப்பர் கிங்ஸ் ஏலமெடுத்திருந்தது. இவர்கள் தங்களுக்கு செலுத்தப்பட்ட தொகைக்கான அழுத்தத்திலிருந்து எவ்வாறு பெறுபேறுகளை வழங்கப் போகின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகக் காணப்படுகிறது.
சாம்சனும், அணித்தலைவர் ருத்துராஜ் கைகவாட்டும் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாகக் களமிறங்கவுள்ள நிலையில், ஆயூஷ் மாத்ரே மூன்றாமிடத்தில் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்த குஜராத் டைட்டான்ஸ் ஏறத்தாழ அதேயணியுடனேயே இம்முறையும் களமிறங்குகின்றது. அணித்தலைவர் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஜொஸ் பட்லரிலேயே துடுப்பாட்டம் கடந்த முறை பெரிதளவில் தங்கியிருந்த நிலையில், இம்முறை ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டை டொம் பன்டன் பிரதியிட்டுள்ளார். இது தவிர படலரின் அண்மைய போர்மானது சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது பின்னடைவாகக் காணப்படுகின்றது. பன்டனின் இடத்தில் கிளென் பிலிப்ஸ் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.
கடந்த முறை ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கானின் பெறுபேறுகள் எதிர்பார்த்தளவில் இல்லாத நிலையில் அவர் அதை இம்முறை திருத்த முயல்வார் என நம்பலாம். தவிர தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடாவை மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறைவீரர் ஜேஸன் ஹோல்டர் பிரதியிடக் கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
கடந்தாண்டு தொடரை சிறப்பாக ஆரம்பித்திருந்தாலும் ஐந்தாமிடத்தையே டெல்லி கப்பிட்டல்ஸ் பெற்றிருந்தது. பதும் நிஸங்கவின் வருகையானது கப்பிட்டல்ஸுக்கு முன்வரிசையில் அனுகூலத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறித்திவி ஷா டெல்லிக்குத் திரும்பியுள்ளபோதும் அண்மைய காலங்களில் அவரின் போர்ம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லரின் வருகையானது மத்திய வரிசைக்கு பலத்தை வழங்குவதுடன், நிதிஷ் ரானாவின் அண்மைய போர்மும் சிறப்பாகக் காணப்படுகிறது. தவிர இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்திய தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி, இந்திய உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட ஆகிப் நபி ஆகியோரின் இருப்பும் கப்பிட்டல்ஸுக்கு அனுகூலமாய் அமைகிறது.
அபிஷேக் ஷர்மா, ட்ரெவிஸ் ஹெட், பதில் அணித்தலைவர் இஷன் கிஷன், ஹெய்ன்றிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி என ஏற்கெனவே அதிரடியான துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருந்த சண்றைசர்ஸ் ஹைதரபாத் இம்முறை உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்த சலில் அரோரா மூலம் மேலதிக அதிரடிச் சேர்க்கையைக் கொண்டிருந்தாலும் பந்துவீச்சு கேள்விக்குறியாகவே உள்ளது.
அதிலும் ஆரம்பப் போட்டிகளில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவின் பங்கேற்பும் குறைந்தது தொடரின் முதல் அரைப் பகுதியில் வழமையான அணித்தலைவர் பற் கமின்ஸின் பங்கேற்பும் இல்லாத நிலையில் ஹர்ஷால் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட், ஷிவம் மவி உள்ளிட்டோரின் பங்களிப்பிலேயே சண்றைசர்ஸின் வெற்றிவாய்ப்பு தங்கியுள்ளது.
இங்கிலாந்தின் சகலதுறைவீரர் லியம் லிவிங்ஸ்டனை பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்தபோதும் அவரின் அண்மைய கால பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் றைடர்ஸானது அன்ட்ரே ரஸல் என்ற பெரிய ஒரு இடைவெளியுடன் களமிறங்குகின்றது. இது புதிய உப அணித்தலைவர் ரிங்கு சிங், ரமன்டீப் சிங் மற்றும் அதிகூடிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கமரன் கிறீன் ஆகியோர் கூடிய அழுத்தத்தில் காணப்படுகின்றனர்.
எவ்வாறெனினும் டிம் செய்ஃபேர்ட், பின் அலென் எனும் போர்மிலுள்ள அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட இணையானது ரிங்கு, கிறீனின் அழுத்தத்தை ஓரளவு குறைக்கலாம். காயங்களால் ஹர்ஷித் ராணா, ஆகாஷ் டீப் மற்றும் அரசியல் காரணங்களால் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோரை தொடர் முழுவதுக்கும் மற்றும் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண உடற்றகுதிப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட போட்டிகளைத் தவற விடுவது நைட் றைடர்ஸுக்கு பின்னடைவாகக் காணப்படுகிறது.
குறித்த இடைவெளியை வைஃபவ் அரோரா, சிம்பாப்வேயின் வேகப்பந்துவீச்சாளர் பிளெஸிங்க் முஸர்பனி, உம்ரான் மலிக், கார்த்திக் தியாகி ஆகியோரே அந்த இடைவெளியை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
ராஜஸ்தான் றோயல்ஸானது கடந்தாண்டு ஒன்பதாமிடத்தையே பெற்ற நிலையில் சஞ்சு சாம்சனை சென்னை சுப்பர் கிங்ஸிடம் கொடுத்து இரவீந்திர ஜடேஜாவைப் பெற்றமை எவ்வளவு அனுகூலமானது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சாம்சனையும் ஜடேஜாவையும் நேரடியாக ஒப்பிட முடியாதென்றாலும் தர்க்க ரீதியில் சென்னையே சாதகத்தைப் பெற்றுள்ளது எனக் கூறலாம்.

அணித்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ள ரியான் பராக்கின் அண்மைய பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக உள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டவீரர் ஷிம்ரோன் ஹெட்மயரின் அண்மைய போர்மானது அதிரடியாகக் காணப்படுகிறது. மீண்டுமொரு முறை யஷஷ்வி ஜைஸ்வால், வைபவ் சூரியவன்ஷி இணையிடமிருந்து சிறப்பான ஆரம்பத் துடுப்பாட்டப் பெறுபேறு எதிர்பார்க்கப்படுகிறது.
ஜொஃப்ரா ஆர்ச்சரோடு நன்ட்ரே பேர்கரின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுவதோடு, சந்தீப் ஷர்மா மீண்டுமொரு முறை முக்கியமானவராகக் காணப்படுகின்றார். ஜடேஜாவுடன் ரவி பிஷ்னோய் என சுழற்பந்துவீச்சு பலமானதாகக் காணப்படுகிறது.
மத்தியவரிசை வெளிநாட்டு வீரர் இடத்துக்கு தென்னாபிரிக்காவின் டொனோவன் பெரைரா, இலங்கையின் தசுன் ஷானகவுக்கிடையில் போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸானது கடந்தாண்டு ஏழாமிடம் பெற்ற நிலையில் அவ்வணியின் வெற்றி வாய்ப்புகள் பெரும்பாலும் அணித்தலைவர் றிஷப் பண்ட், நிக்கலஸ் பூரானிலேயே தங்கியுள்ளது. ஜொஷ் இங்லிஸ் ஏலமெடுக்கப்பட்டாலும் அவர் குறிப்பிட்ட போட்டிகளிலேயே விளையாடுவாரென முன்னரே கூறப்பட்டிருந்தது.
இதுதவிர உடற்றகுதிச் சோதனையைப் பூர்த்தி செய்து தடையில்லாச் சான்றிதழைப் பெறாமை காரணமாக இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் வனிது ஹசரங்க இன்னும் அணியில் இணையாதது அவ்வணிக்கு பின்னடைவாகக் காணப்படுகின்றது.
மீண்டுமொரு முறை டிக்வேஷ் ரதி முக்கிய வீரராக சுப்பர் ஜையன்ட்ஸுக்கு காணப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, மொஹமட் ஷமி, அன்றிச் நொர்கியா வருகையோடு மொஷின் கான், ஆவேஷ் கான், ஆகாஷ் சிங், பிறின்ஸ் யாதவ், மாயங்க் யாதவ் எனப் பலமான வேகப்பந்துவீச்சுக் கூட்டணி காணப்படுகின்றது.
ரதியோடு ஷபாஸ் அஹ்மட், மணிமாறன் சித்தார்த் என சுழற்பந்துவீச்சும் சொல்லிக் கொள்ளும்படியே உள்ளது.
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago