2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இந்தியாவுக்கு அதிரடி வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 நவம்பர் 07 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இந்திய அணிக்கு அதிரடி வெற்றி கிடைத்துள்ளது.

மொகாலியில் இடம்பெற்றுவந்த இப்போட்டியில், 3ஆவது நாளிலேயே போட்டி முடிவு கிடைத்துள்ளது.

218 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 39.5 ஓவர்கள் மாத்திரமே நிலைத்து, 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 108 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

10 ஓட்டங்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அவ்வணி, 6 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களுடன் காணப்பட்டது. அதன் பின்னர், 7ஆவது விக்கெட்டுக்காக 42 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அடுத்த 4 விக்கெட்டுகளும் 7 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

துடுப்பாட்டத்தில், ஸ்டியான் வான் ஸைல் 36 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, இன்னும் 3 வீரர்கள் மாத்திரமே 10 ஓட்டங்களுக்கும் அதிகமாகப் பெற்றனர்.

பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் இரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் அமித் மிஷ்ரா, வருண் ஆரொன் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, 2 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி, 200 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, இறுதி 8 விக்கெட்டுகளையும் 39 ஓட்டங்களுக்கு இழந்தது.

துடுப்பாட்டத்தில், செற்றேஸ்வர் புஜாரா 77 ஓட்டங்களையும் முரளி விஜய் 47 ஓட்டங்களையும் விராத் கோலி 29 ஓட்டங்களையும் ரிதிமான் சகா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில்,இம்ரான் தாஹிர், சைமன் ஹாமர் இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் வேர்ணன் பிலாந்தர், ஸ்டியான் வான் ஸைல் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இந்திய அணி, முரளி விஜயின் 75 ஓட்டங்களுடன் 201 ஓட்டங்களைப் பெற, தென்னாபிரிக்க அணி தனது முதல் இனிங்ஸில், ஏபி டி வில்லியர்ஸின் 63 ஓட்டங்களின் துணையோடு 184 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இப்போட்டியின் நாயகனாக, ரவீந்திர ஜடேஜா தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .