2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

இறுதிப் போட்டியில் ஜுவென்டஸ்

Gopikrishna Kanagalingam   / 2017 மே 10 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இத்தாலியக் கழகமாக ஜுவென்டஸ் கழகம், முதலாவது அணியாகத் தகுதிபெற்றுள்ளது. மொனாக்கோவின் மொனாக்கோ கால்பந்தாட்ட அணிக்கெதிராக இலகுவாக வெற்றிபெற்றே, இறுதிப் போட்டிக்கு அவ்வணி தகுதிபெற்றது.

இரு அணிகளும் சந்தித்த முதலாவது அரையிறுதிப் போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, சிறப்பான முன்னிலையில் காணப்பட்ட ஜுவென்டஸ், அந்த முன்னிலையை விட்டுக் கொடுக்காது விளையாடியது.

போட்டியின் 33ஆவது நிமிடத்தில், அவ்வணியின் மரியோ மன்ஸுகிச், தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்று, அணிக்கு முன்னிலை வழங்கினார். முதலாவது பாதி முடிவடைவதற்குச் சிறிது முன்பாக, டானியல் அல்விஸ், மிகச்சிறப்பான கோலொன்றைப் பெற்று, 2-0 என்ற கோல் கணக்கில், ஜுவென்டஸ் முன்னிலை வகிப்பதை உறுதி செய்தார்.

மொனாக்கோவின் 18 வயதான கிலியன் பப்பே, போட்டியின் 69ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற போதிலும், தனது அணியின் தோல்வியைத் தடுத்த அவரால் முடிந்திருக்கவில்லை. இதன்படி, 2-1 என்ற கணக்கில் இப்போட்டியில் வென்ற ஜுவென்டஸ், 4-1 என்ற ஒட்டுமொத்த கோல் கணக்கில் அரையிறுதியில் வென்று, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இதேவேளை, வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஜுவென்டஸ் அணியின் முகாமையாளர் மக்ஸ் அலெகிரி, சம்பியன்ஸ் லீக்கை வெல்வதற்காக நல்ல வாய்ப்பு, தனது அணிக்குக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

“இறுதிப் போட்டியில் நாங்கள் இருக்கிறோம், அதை வெல்வதற்கு முயல வேண்டும். இவ்வாண்டில் அது சரியாகும் என நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில், சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற ஜுவென்டஸ், அப்போட்டியில் பார்சிலோனா அணியிடம், 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றமையையே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.

சம்பியன்ஸ் லீக்கின் இந்தப் பருவகாலத்தில், எந்தவோர் அணியும், ஜுவென்டஸ் அணிக்கெதிராக ஒன்றுக்கு மேற்பட்ட கோல்களைப் பெற்றிருக்கவில்லை என்பதோடு, இந்தப் போட்டியில் அவ்வணி விட்டுக்கொடுத்த கோலே, நொக் அவுட் தொடரில், அவ்வணி விட்டுக் கொடுத்த முதலாவது கோலாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .