2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கையை வென்றது நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில், நியூசிலாந்து அணி, 122 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும், இளைய அணியாகக் களமிறங்கிய இலங்கை, சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியது.

டுனேடினில் இடம்பெற்ற இப்போட்டியில், 3 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களுடன் இன்றைய 5ஆவது நாளை ஆரம்பித்த இலங்கை அணி, 282 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

50.1 ஓவர்களுடன்  இன்றைய நாளை ஆரம்பித்த அவ்வணி, 20.1 ஓவர்களுக்கு விக்கெட் எதனையும் இழக்காததோடு, 3 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்கள் என்ற பலமான நிலையில் காணப்பட்டது. ஆனால், 71ஆவது ஓவரின் 3ஆவது பந்தில், நீல் வக்னரின் பந்தொன்றை ஆடாமல் அப்படியே விட முயன்ற அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்க, அதுவரை சிறப்பாக ஆடிவந்த டினேஷ் சந்திமால், 16 பந்துகளின் பின்னர் ஆட்டமிழந்து, இலங்கையின் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதியில், 95.2 ஓவர்களில், இலங்கையின் அனைத்து விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன.

துடுப்பாட்டத்தில் டினேஷ் சந்திமால் 58, குசால் மென்டிஸ் 46, கித்துருவன் விதானகே 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், டிம் சௌதி 3 விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ற், மிற்சல் சான்ட்னெர், நீல் வக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, மார்ட்டின் கப்டிலின் 156, கேன் வில்லியம்ஸனின் 88, பிரென்டன் மக்கலத்தின் 75 ஓட்டங்களின் துணையோடு 431 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், நுவான் பிரதீப் 4, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, திமுத் கருணாரத்னவின் 84, டினேஷ் சந்திமாலின் 83 ஓட்டங்களின் துணையோடு 294 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் டிம் சௌதி, நீல் வக்னர் இருவரும் தலா 3, ட்ரென்ட் போல்ற், மிற்சல் சான்ட்னெர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் 3ஆவது இனிங்ஸில், டொம் லேதமின் ஆட்டமிழக்காத 109, கேன் வில்லியம்ஸனின் 71, மார்ட்டின் கப்டிலின் 46 ஓட்டங்களின் துணையொடு, 3 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று, இலங்கை அணிக்கு 405 ஓட்டங்களை அவ்வணி இலக்காக வழங்கியிருந்தது.

இப்போட்டியின் நாயகனாக, மார்ட்டின் கப்டில் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .