2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக சம்பியன்களாக, மேற்கிந்தியத் தீவுகள் அணி தெரிவாகியுள்ளது. இந்தியாவுக்கெதிரான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, மேற்கிந்தியத் தீவுகள் அணி சம்பியனாகியுள்ளது.

மிர்புரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. 3 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை, முதலாவது ஓவரிலேயே இழந்த அவ்வணி, 8, 27, 41, 50, 87, 116, 120, 123 ஓட்டங்களுக்கு என, விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக, சீரான இடைவெளியில் இழந்தது.

தனித்து நின்று போராடிய சப்ராஸ் கான், 89 பந்துகளில் பெறப்பட்ட 51 ஓட்டங்களைப் பெற்று, இந்திய அணி, 100 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழப்பதைத் தவிர்த்தார். தவிர, றாகுல் பதம் 21, மஹிபால் லொம்ரோர் 19 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்த வீரரும், 10 ஓட்டங்களைக் கூடப் பெற்றிருக்கவில்லை. பந்துவீச்சில் றயன் ஜோன், 10 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அல்ஜாரி ஜோசெப் 10 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தவிர, கீமோ போல் 2 விக்கெட்டுகளையும் செமர் கே. ஹோல்டர், ஷமர் ஸ்பிறிங்கர் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

146 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டை 5 ஓட்டங்களுக்கு இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், 3ஆவது விக்கெட்டுக்காக 39 ஓட்டங்கள் பகிரப்பட்டு, 22.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், அடுத்த 3 விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக இழந்து, 5 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், 6ஆவது விக்கெட்டுக்காகப் பிரிக்கப்படாத 69 ஓட்டங்கள் பகிரப்பட, மேற்கிந்தியத் தீவுகள் அணி சம்பியனானது.

துடுப்பாட்டத்தில் கேசி கார்டி ஆட்டமிழக்காமல் 52 (125), கீமோ போல் ஆட்டமிழக்காமல் 40 (68) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மாயங் தகர், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக, மேற்கிந்தியத் தீவுகளின் கேசி கார்ட்டி தெரிhனார். தொடரின் நாயகனாக, பங்களாதேஷ் தலைவர் மெஹெதி ஹஸன் மிராஸ் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .