2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

ஐ.சி.சி தவிசாளர் பதவியிலிருந்து ஸ்ரீனிவாசன் நீக்கம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 09 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் பதவியிலிருந்து என். ஸ்ரீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வர்த்தக ரீதியில் கிரிக்கெட்டை வளர்த்த ஸ்ரீனிவாசன், மோசடிகள், பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், அவமானத்துடன் வெளியேறுகின்றார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக இருந்தபோது, இந்தியா தலைமையில் சர்வதேச கிரிக்கெட் சபையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் காரணமாக உருவாக்கப்பட்ட பதவியான சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளராக, என். ஸ்ரீனிவாசன் தெரிவாகியிருந்தார். அடுத்தாண்டு ஜூலை வரை, அப்பதவியில் இருப்பதற்கு அவருக்குக் காலமிருந்தது.

எனினும், இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சூதாட்டம், முறைகேடுகள், முரண்பாடான பதவி வகிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தெரிவுசெய்யப்பட முடியாது போக, புதிய தலைவராக ஷஷாங் மனோகர் தெரிவானார்.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்தில், சர்வதேச கிரிக்கெட் சபைத் தவிசாளர் பதவியிலிருந்து ஸ்ரீனிவாசனை நீக்குவது எனவும், அவருக்குப் பதிலாக ஷஷாங் மனோகரை அப்பதவியில் அமர்த்துவது எனவும் உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக என். ஸ்ரீனிவாசன் இன்னமும் பதவி வகிக்கின்ற போதிலும், அப்பதவியிலிருந்தும் அவர் நீக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தில் மாத்திரமல்லாது, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திலும் ஸ்ரீனிவாசனின் முடிவு, அண்மித்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவாளர்களில், றொஜர் பின்னி, ரஜின்டர் சிங் ஹான்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு,எம்.எஸ்.கே பிரசாத், ககன் கோடா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், றொஜர் பின்னியின் மகன் ஸ்டுவேர்ட் பின்னி, இந்திய கிரிக்கெட் அணியின் அதிகளவில் இடம்பெறும் நிலையில், அதில் முரண்பாடான சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மறுபுறத்தில், இந்தியன் பிறீமியர் லீக்கின் நிர்வாகக் குழுவிலிருந்து, ரவி ஷாஸ்திரி நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பணிப்பாளராகப் பதவி வகிக்கும் நிலையில், முரண்பாட்டுச் சூழ்நிலையைத் தவிர்க்கவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .