2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கேள்விக்குள்ளான டோணியின் தலைமைத்துவம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதற்கு, இந்திய அணியின் மகேந்திரசிங் டோணி எடுத்த சடுதியான முடிவு காரணமாக, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அவரது தலைமைத்துவம் பற்றிய கேள்விகளும் எழுந்ததாக, இந்திய அணியின் முன்னாள் பிரதம தேர்வாளர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு டிசெம்பரில் அவுஸ்திரேலியாவுக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, 4 போட்டிகள் கொண்ட தொடரின் 3ஆவது போட்டியின் முடிவில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக, அப்போதைய தலைவரான டோணி அறிவித்தார். இது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தற்போது கருத்து வெளியிட்டுள்ள பட்டீல், அந்த ஓய்வைத் தொடர்ந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகவும், ஆனால் 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்குச் சில மாதங்களே காணப்பட்ட நிலையில், மாற்றத்தை ஏற்படுத்தாது விடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, டோணியின் முடிவையும் அவர் விமர்சித்தார். மூழ்கிக் கொண்டிருந்த கப்பல் போன்றது என்று தெரிவிக்க முடியாவிட்டாலும், அந்தத் தொடரில் விராத் கோலி தவிர ஏனையோரின் பெறுபேறுகள் சிறப்பாக இருந்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பட்டீல், சிரேஷ்ட வீரராக, அவ்வாறான திடீர் முடிவை எடுத்தமை, அதிர்ச்சியைத் தந்ததாகத் தெரிவித்தார்.

அது குறித்து, டோணியிடமும் கேட்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அதற்கு டோணி, தனது பெறுபேறுகள் போதுமானதாக இருந்திருக்கவில்லை என்பதால் அந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்ததாகவும், அது சுயநலமற்ற முடிவு எனவும் குறிப்பிட்டார்.

இந்திய அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்கள் கொண்ட அணிக்கு, மகேந்திரசிங் டோணியே இன்னமும் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .