Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவந்த ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியனாக, உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா முடிசூடியுள்ளார். உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை வென்றே, அவர் சம்பியனாகத் தெரிவானார்.
காலிறுதிப் போட்டியில் வைத்து, 2ஆம் நிலை வீரரான அன்டி மரேயைத் தோற்கடித்த ஜப்பானின் கீ நிஷிகோரியை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்த வவ்றிங்கா, தனது 6 போட்டிகளில் மூன்றில், எதிரணியினர் ஓய்வுபெற்றுச் சென்றமையால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற நொவக் ஜோக்கோவிச்சை எதிர்கொண்டார்.
இதற்கு முன்பு, இருவரும் 23 போட்டிகளில் மோதியிருந்த நிலையில், அவற்றில் 19 போட்டிகளில் வென்ற ஜோக்கோவிச்சே, இந்தப் போட்டியிலும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
முதலாவது செட்டில் 3-0 என முன்னிலை வகித்த ஜோக்கோவிச், பின்னர் 5-2 என முன்னிலை வகித்தார். ஆனால், வவ்றிங்கா தொடர்ந்து போராட, 6-6 என்ற நிலை ஏற்பட்டது. சமநிலை உடைப்புக்கான புள்ளிகளில் 7-1 என ஜோக்கோவிச் வெற்றிபெற, முதலாவது செட்டை, 7-6 என அவர் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய வவ்றிங்கா, 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ஜோக்கோவிச் போராடி, 4-4 என்ற நிலைக்குக் கொண்டுவந்த போதிலும், அந்த செட்டை 6-4 என, வவ்றிங்கா கைப்பற்றினார்.
மூன்றாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய வவ்றிங்கா, 3-0 என முன்னிலை வகித்த போதிலும், ஜோக்கோவிச் மீண்டும் போராடி, 3-3 என்ற புள்ளிகள் கணக்குக்குக் கொண்டுவந்தார். பின்னர், 5-5 என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் இறுதியில், 7-5 என்ற புள்ளிகள் கணக்கில், வவ்றிங்கா வெற்றிபெற்றார்.
நான்காவது செட்டிலும் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்ற வவ்றிங்கா, 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தார். பின்னர், 3-1 என்ற நிலைமை காணப்பட்ட போது, தனது காலில் காணப்பட்ட கொப்புளங்கள் காரணமாக, சிகிச்சைக்கு அழைத்தார். பின்னர், 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் வவ்றிங்கா வெற்றிபெற்றார். இதனடிப்படையில், 6-7, 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில், இவ்வாண்டின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரை, வவ்றிங்கா வெற்றிகொண்டார்.
இந்த வெற்றி மூலம், தனது மூன்றாவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை, வவ்றிங்கா பெற்றுக் கொண்டார். அவர் இன்னமும், விம்பிள்டன் போட்டிகளில் மாத்திரமே சம்பியன் பட்டம் பெற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு, தனது 13ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் ஜோக்கோவிச்சின் கனவையும் அவர் தகர்த்தார்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago