2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தடைக்கு மத்தியிலும் ஒலிம்பிக் குழாமை அறிவித்தது ரஷ்யா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 06 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சில வாரங்களில் பிரேஸிலின் றியோ டீ ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான 68 பேர் கொண்ட பலம் வாய்ந்த தடகளவீரர்கள் குழாமை ரஷ்யா அறிவித்துள்ளது.

அரச ஆதரவுடன் ரஷ்யாவில் ஊக்கமருந்துப் பாவனை இடம்பெறுவதாக கூறப்பட்டதையடுத்து, கடந்த நவம்பர் மாதம், முதல் முறையாக, தடகள ஆளும் உடல் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், ரஷ்ய ஒலிம்பிக் செயற்குழுவும் அதன் தடகள வீரர்களும் மேற்படித் தீர்ப்புக்கெதிராக விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளதுடன், இதன் இறுதித் தீர்ப்பானது, எதிர்வரும் 21ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, குறிப்பிட்ட எண்ணிக்கையான ரஷ்ய தடகள வீரர்கள், றியோ டீ ஜெனீரோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் சுயாதீன தடகள வீரர்களாக பங்குபற்றலாம் என தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இவ்வாறு சுயாதீன தடகள வீரர்களாக பங்குபற்றுவதாக இருந்தாலும், ரஷ்யாவுக்கு வெளியே மீண்டும் சோதிக்கப்படுதல் உள்ளடங்கலான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, 68 தடகளவீரர்கள் உள்ளடங்கிய பட்டியலை, அனைத்து ரஷ்ய தடகளவீரர்களுக்கான சம்மேளனம் செவ்வாய்க்கிழமை (05) வெளியிட்டுள்ளது. இதில், கோலூன்றிப் பாய்தலில் இரண்டு தடவை ஒலிம்பிக் சம்பியனான யெலினா இசிபயோவா,  2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில், உயரம் பாய்தலில் தங்கம் வென்ற இவான் உக்ஹொவ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .