Shanmugan Murugavel / 2017 ஜனவரி 04 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து மகேந்திர சிங் டோணி விலகியுள்ளார். இம்மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கு முன்பதாகவே, தனது பதவியிலிருந்து டோணி விலகியுள்ளார்.
எவ்வாறெனினும், இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில், விக்கெட் காப்பில் ஈடுபடும் துடுப்பாட்ட வீரராக அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு டோணி தயாராகவுள்ளார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துத் தொடருக்கான அணிகளைத் தெரிவு செய்வதற்காக, மும்பையில் நாளை தேர்வாளர்கள் கூடுகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான புதிய தலைவரை உடனடியாக இந்திய கிரிக்கெட் சபை அறிவிக்காதபோதும், இந்திய டெஸ்ட் அணித் தலைவரான விராத் கோலியே தலைவராக நியமிக்கப்பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து, கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் மெல்பேணில் இடம்பெற்ற போட்டியுடன் ஓய்வுபெற்றதுடன், அணித்தலைமையிலிருந்து விலகிய டோணி, 2007ஆம் ஆண்டு தான் அணித்தலைவராக பதவியேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அணித்தலைவராக நேற்று வரை தொடர்ந்திருந்தார்.
இந்தியாவின் மிகச்சிறந்த தலைவராகப் போற்றப்படும் டோணி, தென்னாபிரிக்காவில் 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக இருபதுக்கு-20-ஐ இந்தியாவுக்குப் பெற்றிருந்ததுடன், இந்தியாவில் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத்தையும், இங்கிலாந்தில் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத்தையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.
இந்தியாவுக்கு, 199 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய டோணி, 110 போட்டிகளில் வென்றதுடன் 74 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார். இது தவிர, 72 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, 41 வெற்றிகளையும் 28 தோல்விகளையும் பெற்றுள்ளார். இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் அணித்தலைவரான டோணி, 27 வெற்றி, 18 தோல்வி, 15 வெற்றிதோல்வியற்ற முடிவுகளைப் பெற்றுள்ளார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், அணித்தலைவராக, 86 என்ற ஸ்ரைக் ரேட்டில், 54 என்ற சராசரியில் 6,633 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், அணித்தலைவராக, 122.60 என்ற ஸ்ரைக் ரேட்டில் 1,112 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago