2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பொக்ஸிங் டே கொண்டாட்டம்: நாளை மூன்று போட்டிகள்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாளான 'பொக்ஸிங் டே"இல், கிரிக்கெட் போட்டிகளும் களைகட்டவுள்ளன. மூன்று போட்டிகள், நாளை ஆரம்பிக்கவுள்ளன.

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ளது.

டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாமிடத்தைப் பெற்ற நியூசிலாந்தை, அந்நாட்டில் வைத்துச் சந்திப்பதால், வெற்றிபெறுவதற்கு, அதிகமாகப் போராடி வேண்டியிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி, பலமான அணியாகக் கருதப்படுவதால், இத்தொடரில் முதலாவது வெற்றியைப் பதிவுசெய்வதற்கான வாய்ப்பும், அவ்வணிக்குக் காணப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, மெல்பேர்ணில் ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, இலங்கை நேரப்படி, காலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
முதலாவது போட்டியில் இலகுவான, இனிங்ஸ் வெற்றியைப் பெற்ற அவுஸ்திரேலிய அணியே, இப்போட்டியிலும் இலகுவாக வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக, பந்துவீச்சும் துடுப்பாட்டமும், உயர்வடைய வேண்டிய தேவை காணப்படுகிறது.

தென்னாபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, கிங்ஸ்மீட், டேர்பனில் ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.
இன்னமும் தங்களைச் சரியாக நிலைநிறுத்தாத இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கெதிராகப் பெற்ற தோல்வியுடன் களமிறங்க, இந்தியாவுக்கெதிராகப் பெற்ற மோசமான தோல்விகளின் பின்னணியில், தென்னாபிரிக்க அணி களமிறங்குகிறது. காயமடைந்திருந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், முழுமையான உடற்தகுதியை எட்டியுள்ள நிலையில், தென்னாபிரிக்க அணிக்கு, பலம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், உலக டெஸ்ட் துடுப்பாட்ட வரிசைப்படுத்தலில் முதல் 5 இடங்களிலுள்ள வீரர்களில், முதல்நிலை வீரர் கேன் வில்லியம்ஸனைத் தவிர, ஜோ றூட், ஏபி டி வில்லியர்ஸ், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். தவிர, 7ஆம் இடத்திலுள்ள ஹஷிம் அம்லா, 9ஆம் இடத்திலுள்ள அலஸ்டெயர் குக் ஆகியோரும் பங்குபற்றுகின்றனர். முதலிடத்திலுள்ள கேன் வில்லியம்ஸன், ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

பந்துவீச்சுத் தரப்படுத்தலில் முதலிடத்திலுள்ள டேல் ஸ்டெய்ன், 5ஆம் இடத்திலுள்ள ஸ்டுவேர்ட் ப்ரோட், 6ஆம் இடத்திலுள்ள ஜொஷ் ஹேஸல்வூட் ஆகியோரும், இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .