2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிறந்த நாளன்று சம்பியனானார் அன்டி மரே

Shanmugan Murugavel   / 2016 மே 16 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவற்ற இத்தாலி பகிரங்க டென்னிஸ் (றோம் மாஸ்டர்ஸ்) தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பிரித்தானியாவில் அன்டி மரே, சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸூம் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களும் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா - சுவிற்ஸர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடியும் சம்பியனாகினர்.

களிமண் தரையில் இடம்பெறும் இப்போட்டித் தொடர், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடருக்குப் பின்னரான, கௌரவம்மிக்க களிமண் தரைத் தொடராகக் கருதப்படுவதுடன், இத்தொடரை அடுத்து இடம்பெறும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடருக்கான தயார்படுத்தலில் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

இதில், இம்முறை இடம்பெற்ற தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சும் உலகின் தற்போதைய இரண்டாம் நிலை வீரரும் போட்டி இடம்பெற்ற ஞாயிறன்று, தனது 29ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியவருமான அன்டி மரேயும் பங்குகொண்டனர்.

இதன்போது, சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்திய அன்டி மரே, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில், நொவக் ஜோக்கோவிச்சைத் தோற்கடித்து, சம்பியன் பட்டம் வென்றார்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற மற்றொரு கண்மண் தரைத் தொடரான மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விருவருமே மோதியிருந்த நிலையில், அதில் நொவக் ஜோக்கோவிச் வெற்றிபெற்று, சம்பியனாகியிருந்தார். அதற்குப் பழிவாங்கும் வகையில், அன்டி மரேயின் இந்த வெற்றி அமைந்தது.

பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸூம் மற்றோர் அமெரிக்க வீராங்கனையான மடிசன் கீஸ்-உம் மோதினர். இதில், 7-6, 6-3 என்ற நேரடி செட் கணக்கில், செரினா வில்லியம்ஸ் வெற்றிபெற்றுச் சம்பியனானார். இதன்மூலம், பெண்கள் டென்னிஸ் தனது ஆதிக்கத்தை அவர், தொடர்ந்தும் வெளிப்படுத்திக் கொண்டார்.

ஆண்களுக்கான இரட்டையர் போட்டிகளில் அமெரிக்காவின் பொப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்கள், கனடாவைச் சேர்ந்த வசெக் பொஸ்பிசில், அமெரிக்காவின் ஜக் சொக் ஜோடியை எதிர்கொண்டனர். இதன்போது, 6-2, 6-3, 10-7 என்ற செட் கணக்கில், பிரையன் சகோதரர்கள் வெற்றிபெற்றனர்.

பெண்களுக்கான இரட்டையர் போட்டிகளில், உலகின் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் சானியா மிர்ஸா - சுவிற்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, தங்களது சிறப்பான திறமை வெளிப்பாட்டைத் தொடர்ந்து, இத்தொடரிலும் சம்பியனாகினர்.

ரஷ்யாவைச் சேர்ந்த எகடெரினா மகரோவா, எலீனா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்ட இந்த ஜோடி, 6-1, 6-7, 10-3 என்ற செட் கணக்கில், வெற்றிபெற்றுச் சம்பியனாகினர்.

இந்தச் சம்பியன் பட்டத்துடன், இவ்வாண்டில் 5 சம்பியன் பட்டங்களை, சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .