2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மெஸ்ஸியின் ஹட்-ட்ரிக்கோடு சிற்றியைத் தோற்கடித்தது பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் குழுநிலைப் போட்டிகளில், பார்சிலோனா, ஆர்சனல், அத்லெட்டிகோ, பெயார்ண் மியூனிச், பரிஸா ஜேர்மா ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

பார்சிலோனா, மன்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. போட்டியின் முதலாவது பாதியில், பார்சிலோனாவுக்கு ஈடுகொடுத்து சிற்றி ஆடியபோதும், இரண்டாவது பாதியில் புரிந்த தவறுகள் காரணமாக, தோல்வியைத் தளுவ வேண்டி ஏற்பட்டது.

சிற்றியின் பெனால்டிப் பகுதிக்குள் பெர்ணான்டின்ஹோ விழ, முதலாவது கோலினை மெஸ்ஸி பெற்றார். பின்னர், லூயிஸ் சுவாரஸிடம் தவறுதலாக பந்தைக் கொடுத்த, சிற்றியின் கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோ, சுவாரஸ், அந்தப் பந்தை அடிக்க, பெனால்டி பகுதிக்கு வெளியே, பந்தைக் கையால் பிராவோ கையாள, சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சிற்றியின் நட்சத்திர வீரரான கெவின் டி ப்ரூனே பந்தை இழக்க, அப்பந்தைப் பெற்ற இனியஸ்டா, மெஸ்ஸியிடம் பந்தைக் கொடுக்க, போட்டியின் 61ஆவது நிமிடத்தில், தனது இரண்டாவது கோலை மெஸ்ஸி பெற்றதுடன், 69ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலைப் பெற்றார். பின்னர் பார்சிலோனாவுக்கு கிடைத்த பெனால்டியை நேமர் தவறவிட்டிருந்தபோதும், போட்டி முடிவடைய ஒரு நிமிடமிருக்கையில், மெஸ்ஸியிடமிருந்து பந்தைப் பெற்ற நேமர், ஒரு கோலைப் பெற்றார்.

இப்போட்டியில், சிற்றியின் முன்கள வீரரான சேர்ஜியோ அக்ரோ, மாற்று வீரராகவே இருந்தார். மத்தியகள வீரர்களினால் அணியை நிரப்பிய, முகாமையாளர் பெப் குவார்டிலோவின் உத்தி சிறந்ததாக தென்பட்டிருந்தாலும் வீரர்கள் விட்டிருந்த தவறினால், தோற்ற்க வேண்டி ஏற்பட்டது.

ஆர்சனல், 6-0 என்ற கோல் கணக்கில், பல்கேரிய அணியான லுடோகொரேட்ஸ் ரஸ்கிரட்டை தோற்கடித்தது. ஆர்சனல் சார்பாக, ஏஸில் மூன்று கோல்களையும் அலெக்சிஸ் சந்தேஸ், தியோ வொல்கொட், ஒக்ஸ்லேட்-சம்பர்லின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

ஜேர்மனிய அணியான பெயார்ண் மியூனிச், நெதர்லாந்து அணியான பி.எஸ்.வி ஐந்தோவன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில், பெயார்ண் மியூனிச் வெற்றி பெற்றது. தோமஸ் முல்லர், ஜோஷுவா கிம்மிச், ரொபேர்ட் லெவன்டோஸ்கி, ஆர்ஜன் றொபின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அத்லெட்டிகோ மட்ரிட், ரஷ்ய அணியான றொஸ்டோவ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில், அத்லெட்டிகோ மட்ரிட் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை, அத்லெட்டிகோவின் யனிக் கராஸ்கோ பெற்றிருந்தார்.

பிரான்ஸ் அணியான பரிஸா ஜேர்மா, சுவிற்ஸர்லாந்து அணியான பேஸில் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் பரிஸா ஜேர்மா வெற்றி பெற்றது. பரிஸா ஜேர்மா சார்பாக, ஏஞ்சல் டி மரியா, லூகாஸ் மௌரா, எடின்ஸன் கவானி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, இத்தாலி அணியான நாபோலி, துருக்கி அணியான பெஸ்கிட்டாஸிடம், 3-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .