2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

லா லிகாவில் முதலிடத்தில் பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெயினில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்டத் தொடரான லா லிகாவில் ரியல் மட்ரிட் அணி செவில்லா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ள நிலையில், பார்சிலோனா அணியானது வில்லாரியல் அணியை வெற்றிக்கொண்டு புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது.

பார்சிலோனா, வில்லாரியல் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 60ஆவது நிமிடத்தில் நேமர் ஒரு கோலினைப் பெற்றிருந்ததோடு, 70ஆவது நிமிடத்தில் முனிர் எல் ஹடாட்டி வீழ்த்தப்பட , கிடைக்கப் பெற்ற பனால்டியை லூயிஸ் சுராஸ் கோலாக்கியதோடு, பின்னர் 85ஆவது நிமிடத்தில் நேமர் மீண்டும் ஒரு கோலை அபாரமாகப் பெற்றிருந்தார்.

இதேவேளை, செவில்லா அணியுடனான போட்டியில் ரியல் மட்ரிட் அணி, 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. இந்தப் பருவகால லா லிகா தொடரில் ரியல் மட்ரிட் அணி பெற்ற முதலாவது தோல்வி இதுவாகும். போட்டியின் ஆரம்பத்தில் செஜியோ ராமோஸ் பெற்ற கோலின் மூலம் ரியல் மட்ரிட் அணி முன்னிலை பெற்றபோதும், 36ஆவது நிமிடத்தில் செவில்லா அணியின் ஸீரோ இமோலே பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமமானது.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் 61ஆவது நிமிடத்தில் இவர் பணிகா, 74ஆவது நிமிடத்தில் பெர்னாண்டோ யொரெண்டே பெற்ற கோல்களின் மூலம் செவில்லா அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ரியல் மட்ரிட் அணியின் ஜேம்ஸ் ரொத்ரிகாஸ், ஆறுதல் கோலொன்றினைப் பெற்றபோதும் அவ்வணி தோல்வியடைந்தது.

இந்த வெற்றியுடன் 11 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 2 தோல்வியுடன் பார்சிலோனா அணி, இரண்டாமிடத்தில் உள்ள ரியல் மட்ரிட் அணியை விட மூன்று புள்ளிகள் அதிகமாகப் பெற்று 27 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இப்பருவகால லா லிகா தொடரில் 11 கோல்களைப் பெற்று நேமர், அதிக கோல்களைப் பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதுடன், லூயிஸ் சுராஸ் 9 கோல்களுடன் இரண்டாமிடத்திலும், கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ 8 கோல்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .