Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் பெண்கள் டென்னிஸில், செரினா வில்லியம்ஸ் என்ற பெயர், மிகவும் முக்கியமான பெயர்களுள் ஒன்று. உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் அல்லது வீராங்கனையாக அதிக காலம் இருந்தவர்களின் பட்டியலில், செரினா வில்லியம்ஸ், மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது.
அதிக காலம் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்தவர்களின் பட்டியலில், முதலிடத்தை ஸ்டெபி கிராபுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் அவர் பெற்றுக்கொண்ட தோல்வி, முதலிடத்திலிருந்து அவரைப் பின்தள்ளியது.
செரினாவின் பின்னேற்றத்தால் முதலிடத்துக்கு வந்தவர், ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர். செரினாவின் தோல்வியால் முதலிடத்துக்கு வந்த போதிலும், அண்மைக்காலமாக அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவந்த சிறப்பான பெறுபேறுகளே, அவரை இந்நிலைக்குக் கொண்டு வந்தன. அவரது திறமையில் ஏதாவது சந்தேகமிருக்குமாயின், ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், அவற்றை இல்லாது செய்தார் கேர்பர்.
இறுதிப் போட்டியில், 11ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்ட கேர்பர், 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தை வென்றார். முதலிடத்துக்கு வந்த அவரது வெற்றியை, ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டத்துடன் அவர் கொண்டாடினார்.
ஆண்டின் முதலாவது கிரான்ட் ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸை, அவரது முதலாவது கிரான்ட் ஸ்லாம் பட்டமாக இவ்வாண்டு வென்ற அவர், ஒரே ஆண்டிலேயே இரண்டாவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார். இவற்றுக்கு மேலதிகமாக, விம்பிள்டன் போட்டிகளில் இறுதிப் போட்டிக்குச் சென்று, செரினா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்திருந்த அவர், ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப் போட்டியில், புவேர்ட்டோ றிக்கோவின் மொனிக்கா புய்க் என்ற வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்திருந்தார்.
தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ள கேர்பர், அதைத் தக்க வைத்துக் கொள்வதில் சவால்களை எதிர்கொள்கிறார். குறிப்பாக செரினா வில்லியம்ஸ், கார்பைன் முகுருஸா, அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா ஆகிய மூவருமே, முதலிடத்துக்காகப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நான்குமுனைப் போட்டியாக இது மாறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
4 hours ago