2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இலங்கையை வென்று முதலிடத்தைப் கைப்பற்றியது இந்தியா

A.P.Mathan   / 2014 நவம்பர் 07 , மு.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் இந்தியா அஹமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டிகள் அடங்கிய தொடரில் 2 இற்கு 0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் அஞ்சலோ மத்தியூஸ் 92 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற அதேவேளை, குமார் சங்ககார 61 ஓட்டங்களையும், திலகரட்ன டில்ஷான் 35 ஓட்டங்களையும், தம்மிக்க பிரசாத் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் உமேஷ் யாதவ், அஷ்வின், அக்சார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் அம்பாத்தி ராயுடு தனது கன்னிச்சதத்தைப் பெற்றுக் கொண்டார். 121 ஓட்டங்களை  ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். சிகார் தவான் 79 ஓட்டங்களையும், விராத் கோலி 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சீகுகே பிரசன்ன 3 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார். 
 
போட்டியின் நாயகனாக அம்பாத்தி ராயுடு தெரிவானார். 
 
இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி மீண்டும் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா அணி தோல்வி அடையாமல் இருந்து தென் ஆபிரிக்கா - அவுஸ்திரேலியா அணிகளுக்கான தொடர் இறுக்கமாகவும் இருக்கும் பட்சத்தில் இந்தியா அணி முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .