Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமான இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டமுடிவில் தமது முதலாவது இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணித்தலைவர் அஞ்செலோ மத்தியுஸ் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்திருந்தார். தொடர்ச்சியாக திரிமானே ஓட்டங்களை பெறத் தடுமாறி வரும் நிலையிலும் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தரங்க அணியில் இடம்பெறவில்லை, முபாரக் அணியில் இடம்பெற்றிருந்தார். மேலும் ரங்கன ஹேரத்தும் அணிக்கு திரும்பியிருந்தார்.
இந்திய அணி இரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா உள்ளடங்கலாக மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள், இஷாந்த் ஷர்மா, வருண் ஆரோனுடன் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. மேலும் மூன்றாவது இடத்தில் ரோஹித் ஷர்மாவே இடம்பெற்றார். புஜாரா அணியில் இடம்பெறவில்லை.
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கையணி தொடக்கத்திலேயே ஷோர்ட் பிட்ச் பந்துகளில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களை பறிகொடுத்து, பின் அஷ்வினின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து ஒருகட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 60 ஓட்டங்களை மட்டுமே பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. தொடர்ந்து மத்தியுஸ், சந்திமல் இருவரும் அரைச்சதங்களை பெற்றமையால் ஓரளவு ஓட்டங்களை பெற்று இறுதியில் சகல விக்கெட்களையும் பறிகொடுத்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கையணி சார்பாக துடுப்பாட்டத்தில் மத்தியுஸ் 64 ஓட்டங்களையும், சந்திமல் 59 ஓட்டங்களையும், ஹேரத் 23 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் 46 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை கைப்பற்றிய இரவிச்சந்திரன் அஷ்வின் அந்நிய மண்ணில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பெறுதியை பதிவு செய்தார். மேலும் அமித் மிஸ்ரா 2 விக்கெட்களையும், இஷாந்த் ஷர்மா, வருண் ஆரோன் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல், மூன்றாவது இடத்தில் பிரகாசிக்க தடுமாறும் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்திருந்தாலும், அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் 53 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் விராத் கோலி 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இலங்கையணி சார்பாக தம்மிக பிரசாத், மத்தியுஸ் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago