2021 ஜூன் 14, திங்கட்கிழமை

‘ஆசிரியர் இடமாற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும்’

Niroshini   / 2017 மே 20 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

“மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நடைபெற்ற முறையற்ற ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் மாகாண கல்விப்பணிப்பாளருமே பொறுப்புக்கூற வேண்டும்” என, கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசத்தின் ஆரையம்பதியில் அமைக்கப்பட்ட பொதுநூலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“கல்குடா கல்வி வலயத்தில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதிலீடுகள் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கல்குடா வலய மாணவர்களின் கல்வி வீழ்ச்சியை நோக்காக கொண்டே இந்த திட்டமிட்ட சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே நான் நோக்குகின்றேன்.

இந்த இடமாற்றங்கள் முறைகேடாக நடைபெற்றதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் மாகாண கல்விப்பணிப்பாளருமே அதற்கான பொறுப்பினை கூறவேண்டிய கடப்பாட்டில் உள்ளனர்.

உடடினயாக பதிலீடுகள் இல்லாமல் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்களை இரத்துச்செய்து, பதிலீடுகளை வழங்கி இடமாற்றங்களை செய்யுமாறு கல்வி அமைச்சரிடமும் மாகாண கல்விப்பணிப்பாளரிடமும் வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

பத்து வருடத்துக்கு மேலாக ஆசிரியர்களான கடமையாற்றுபவர்களை இடமாற்றம் செய்யாமல் தமது அரசியல் இலாபத்துக்காக இரண்டு மூன்று வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் பாதிப்புகள் மாணவர்களுக்கே என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாடு என்று மத சார்பற்ற நாடாக மாறுகின்றதோ அன்றுதான் இந்த நாட்டில் சுபீட்ச நிலையேற்படும் என்பதை தமிழ் பேசும் சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இணைந்த வட-கிழக்கில் நாங்கள் ஓரு தீர்வுத் திட்டத்தினைப் பெற்றக் கொள்ளவேண்டுமானால், தமிழ் முஸ்லிம் இனங்கள் ஒன்றுபடவேண்டும். இணைந்த வட-கிழக்கில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வுத் திட்டத்தினைப் பெறும்போது தந்தை செல்வா கூறியது போன்று முஸ்லிம் மக்களுக்குத் தனி அலகொன்றை வழங்குவது தொடர்பில் நாங்கள் பேசிக்கொள்ள முடியும். அந்த நிலையினை இரு சமூகங்களின் தலைவர்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

கொழும்பில் உள்ள தமிழ் அமைச்சர் ஒருவரின் அலுவலகத்துக்குள் புகுந்த பௌத்த மத துறவியர் அமைச்சருடன் தகாத வார்த்தை பிரயோகங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான ஒரு செயற்பாட்டை இந்த நாட்டில் உள்ள ஏனைய ஒரு மத தலைவரினால் செய்யமுடியுமா? அவ்வாறு ஏனைய மத தலைவர்கள் அவ்வாறு செய்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக சிறைச்சாலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் அடைத்திருக்கும்.

இந்த பெரும்பான்மையினம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த நிரந்தரமான தீர்வினையும் தராது என்பதை அனைவரும் பபுரிந்துகொள்ள வேண்டும். வட-கிழக்கில் இரு இனங்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலமே வடகிழக்கு சுபிட்ச நிலையினை அடையும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .