2021 மே 14, வெள்ளிக்கிழமை

பாவனையாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

Editorial   / 2019 நவம்பர் 28 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.விஜயரெத்தினம், வ.சக்தி, பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பில் நுகரவோரைப் பாதுகாக்கும் வகையில், துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் பணி, நேற்று (27)  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவலக அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்விழிப்புணர்வின் பிரதான நோக்கம், மக்கள் மத்தியில் நேர்மையான வியாபார சூழலையும் பாதுகாக்கப்பட்ட பாவனையாளர்களையும் உருவாக்குவதாகுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பாவனையாளர்களை வலுப்படுத்தலும் சந்தையை ஒழுங்குபடுத்தலும் வியாபாரப் போட்டியை ஊக்குவிப்பதன் மூலம் பாவனையாளருக்குத் தரமான பொருள்களை, நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்வதாகும்.

அத்துடன், பாவனைக்கு பொருந்தாத பொருள்களைத் தடைசெய்வதும் கட்டுப்பாடு விலையை மீறிக் கூடிய விலையில் பொருள்களை விற்கின்ற வர்த்தர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பாவனையாளர்களை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதும் விழிப்பூட்டலின் நோக்கமாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாவனையாளர்கள் கொள்வனவு செய்யப்பட்ட பொருள்கள் தரமானவையாகவும் விலைக் கட்டுப்பாடுக்கு உள்ளடங்கியவையாகவும் அமையாதவிடத்து, அப்பொருள்களை, வர்த்தகரிடம் மீண்டும் கையளித்து, தாம் செலுத்திய பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் பாவனையாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, பொருளில் குறைபாடு அல்லது தரக்குறைவு காணப்படும்பட்சத்தில், பொருளைக் கொள்வனவு செய்த வியாபாரியிடம் உரையாடி சரி செய்து கொள்ளப்படாத நிலையில், 90 நாள்களுக்குள் எழுத்து மூலமான முறைப்பாட்டை, பாவனையாளர் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்புகின்ற சந்தர்ப்பத்தில், குறித்த வர்த்தர்களுக்கு எதிராக  சட்டநடவடிக்கையை மேற்கொள்ள முடியும் போன்ற விவரங்கள் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .