2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வூதியக் கொடுப்பனவை ரூ.3500வரை அதிகரிக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை 1000 ரூபாவிலிருந்து 3,500 ரூபாய்வரை அதிகரிப்பதோடு, அதனை இம்மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரும் தீர்மானமொன்றை பகிரங்கசேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர்க்கிளை நிறைவேற்றியுள்ளது.

ஏறாவூர்க்கிளையின் தலைவர் எம்.கே.முகைதீன் தலைமையில் ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற கூட்டத்தின்போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இது தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கும் அனுப்பிவைத்துள்ளது.

அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

'ஆட்சி மாற்றத்தின் ஊடாக புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் இடைக்கால வரவு -செலவுத்திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவை கருத்திற்கொண்டு பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளதுடன், அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு  10இ000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றோம்.

ஆனால், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூபாய் 1000 மாத்திரம் வழங்கப்படவுள்ளதாக அறிந்து மிகக் கவலையடைந்துள்ளோம்.

கடந்த காலங்களில் பல்வேறு துன்பம் துயரங்களுக்கும் போக்குவரத்து கஷ்டங்களுக்கும் முகம் கொடுத்து எந்தவித வசதி வாய்ப்புக்களுமின்றி அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளிலும் கடமையாற்றி ஓய்வூபெற்றுள்ள ஊழியர்களுக்கு ரூபாய் 1000  அதிகரிப்பு வழங்க்கப்பட்டிருப்பது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இழைத்த அநீதியாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

அது மாத்திரமின்றி புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் மார்ச் மாதம் முடிவடையவுள்ள நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அதிகரித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல்  வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியம் பெறுகின்றவர்கள் மிகவும் கவலையடையவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஆனால் தற்போது கடமையாற்றுகின்ற அரச ஊழியர்கள் போக்குவரத்து உட்பட சகல இதர வசதிகளுடனும் கணினி மயப்படுத்தப்படுள்ள அறைகளில் இருந்து தங்களது கடமைகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு ரூபா 10,000 சம்பள அதிகரிப்பு வழங்கமுடியும் என்றால், கடந்த காலங்களில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடமையாற்றி நாட்டுக்காக உழைத்த ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான சம்பள அதிகரிப்பை ஆகக் குறைந்தது ரூபாய் 3,500 ஆக அதிகரித்து வழங்க ஏன்  அரசாங்கம்  முன்வரவில்லை என்ற கேள்வி எம்மத்தியில் இருக்கின்றது.

இதனைப் பார்க்கும்போது ஓய்வூதியம் பெறுகின்ற சிரேஷ்ட பிரஜைகளை அரசாங்கம் ஓரக்கண்ணால் பார்ப்பதாகவே நாம் கருதுகின்றோம். ஆதலால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அதிகரித்த சம்பளக் கொடுப்பனவினை ரூபாய் 1000 இருந்து ரூபாய் 3500 அதிகரிப்பதோடு 100 நாள் வேலைத்திட்டத்தினுள் உள்வாங்கி அதனை ஓய்வூதிய தினமான இம்மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .