2025 மே 21, புதன்கிழமை

’இனத்துவேசத்தை பேசும் தமிழ் அரசியல் தலைவர்கள் எவ்வாறு முஸ்லிம்களிடம் வாக்குகளை கோரமுடியும்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள், வடக்கு கிழக்கை இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குக​ளை எவ்வாறு கேட்க முடியும் என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

திக்கோடை, தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு, தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் நேற்று(21) நடைபெற்றது அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இன ரீதியாக அல்லது தமிழ் முஸ்லிம் உறவு ரீதியாக மிகுந்த துவேசத்தை பேசுவதால் தமிழ் முஸ்லிம் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கின்றார்கள்.

எதிர்காலத்தில் ஒரு தீர்வுத் திட்டம் வருகின்ற பொழுது எப்படி தமிழ் தலைவர்கள் மீது முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் மக்கள் நம்பிக்கை கொள்வது என்ற சந்தேகம் எழுந்துள்ள அளவுக்கு இவர்களுடைய பேச்சு அமைந்துள்ளது.

இன ரீதியாக இனத்துவேசத்தை ஏற்படுத்துகின்ற பேச்சை இப்போதும் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள் என்றால் அல்லது காணியை கேட்டு பிரதேச செயலாளரிடத்தில் விண்ணப்பிக்கின்ற பொழுது அதை துவேசமாக பார்ப்பார்கள் என்றால் வட கிழக்கு இணைப்பதற்கு இந்த மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை எவ்வாறு தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் மக்களிடத்தில் கேட்க முடியும்.

மக்கள் அனைவரும் ஒருமித்த குரலிலே எல்லோரும் சமமானவர்கள் தான். தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற பேதமையை காட்டித்தான் நாங்கள் கடந்த காலத்தில் முப்பது வருட ஜனநாயக போராட்டம், முப்பது வருட ஆயுதப் போராட்டம் மூலம் எதையுமே நாங்கள் சாதிக்கவில்லை.

வெறுமனே இனத்துவேசத்தை தான் எங்களுக்குள் விதைத்துக் கொண்டோம். வேறு எந்த வரலாறும் எங்களையும் உங்களையும் பாதுகாக்கவில்லை. உலக வரலாற்றிலே தோன்றிய நாகரீகங்கள், போராட்டங்கள் எல்லாம் ஒரு படி முறையை, ஒரு மாற்றுமுறையை மேலோக்கிச் சென்ற வரலாறுதான் இருக்கின்றது.

உலக நாடுகளிலே ஆரம்ப காலத்தில் இருந்த இனத்தவர்கள் எல்லாம், வித்தியாசமாக மாறி தற்போது வேறு ஒரு கோணத்தில் உலகத்தை பார்க்கின்றார்கள். ஆனால் இந்தப் போராட்டம் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்கின்ற பேதமையைத் தான் தந்துவிட்டு போயுள்ளது.

இதனை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இருக்கின்றது. இதைப்பற்றித்தான் நாங்கள் பேச வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு இருக்க வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் பேசவில்லை என்றால் எங்களுக்கு தீர்வு என்பது பூச்சியமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .