2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'கிழக்கு மாகாண சபையில் அடுத்த ஆட்சியும் தமிழர், முஸ்லிம்கள் இணைந்த நல்லாட்சியாக இருக்கும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண சபையின் அடுத்த ஆட்சியும் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து கோலோச்சும் நல்லாட்சியாகவே இருக்கும் என்று தான் சவால் விடுப்பதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்றுப்; பிரிவு கட்டடத்தொகுதி திறப்பு விழா சனிக்கிழமை (4) நடைபெற்றது.  அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தியுள்ள நல்லாட்சியின் பயன் மாகாண சபையோடு மட்டும் நின்றுவிடாது, தமிழ், முஸ்லிம் மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் பிரதிபலிக்க வேண்டும். அதன் நன்மைகளை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்' என்றார்.

'கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்துள்ள இந்த நல்லாட்சியானது மக்கள் மனதில் பாரிய நெகிழ்வுத் தன்மையை வளர்த்துள்ளதோடு நட்புறவு, சமாதானம், இன ஐக்கியத்துக்கு வழிவகுத்துள்ளது.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதை மனம் விட்டுப்  பரஸ்பரமாக பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதற்கான மாற்றங்கள் மக்கள் மனங்களில் எழுந்துள்ளன.

கடந்த 30 வருடகால யுத்தத்தில் பிளவுபட்டுப் போயிருந்த சிறுபான்மையின மக்கள் மத்தியில் இது ஒன்றுபட்ட மகத்தான வெற்றி என்றே கொள்ள வேண்டும். இந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும்.

இனங்களுக்கிடையில் எந்தப் பிரச்சினை இருந்தாலும், அதை மனிதாபிமானத்துடனும் விட்டுக் கொடுப்புடனும் அணுக வேண்டும் என்பதை தற்போதைய சூழல் எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் மார்;ச் மாதம் த.தே.கூட்டமைப்புடன் நாங்கள் சேர்ந்து ஆட்சி அமைத்தபோது, அடுத்த மாத மாகாண சபைக் கூட்டத்தை நடத்த இந்த ஆட்சி நிலைக்காது என்று எங்களுக்குச் சவால் விடுத்தார்கள்.

அவர்கள் ஆரூடம் கூறி இப்பொழுது ஒரு வருடம் கழிந்து விட்டது. நாங்கள் இப்பொழுது அவர்களுக்குச் சவால் விடுக்கின்றோம் அடுத்த மாகாண சபை நிர்வாகமும் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்த நல்லாட்சியாகவே கோலோச்சும். அதனை நாங்கள் சாதித்துக் காட்டுவோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X