2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'கிழக்கு மாகாண முஸ்லிம்களின் 'பிரச்சினைகளைத் தீர்க்க அ.இ.மு.கா அதிகாரங்களைப் பயன்படுத்தும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,
ரீ.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து அதிகாரங்களையும் சக்தியையும்  பயன்படுத்தும் என அக்கட்சித் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு,  மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் சனிக்கிழமை (4) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வர்த்தமானிப் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான எங்களின் கருத்துகளை அரசியல் தலைமைகளிடம் முன்வைத்துள்ளதுடன், இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியுடனும் கலந்துரையாடவுள்ளோம். இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். நாங்கள் அரசாங்கத்தில் இருக்கின்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதற்கான நியாயமான காரணத்தை நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளோம்.

மேற்படி வர்த்தமானிப் பிரகடனம்  காரணமாக திருகோணமலை உட்பட பல மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு ஆபத்து உள்ளது. இந்த ஆபத்தைத் தடுப்பதற்காக நாங்கள் நாடளாவிய ரீதியில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அவற்றில் ஒரு சில உள்வாங்கப்பட்டும்,  பெரும்பான்மையான விடயங்கள் சேர்க்கப்படாமலும்  வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனநாயக ரீதியான நடவடிக்கையை  முன்னெடுப்போம்' என்றார்.  

'தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்தன. ஆனால், ஒரேயொரு முஸ்லிம் கட்சியுடன் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றது. அப்பேச்சுவார்த்தைகளின்போது, உடன்பாடுகள் ஏற்பட்டது போன்று வெளிப்படுத்தப்படுவதையும் நாங்கள் அவதானித்துள்ளோம்.

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா, பிரிய வேண்டுமா என்ற கேள்வி எழும்போது அதன் சாதக, பாதகங்களை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்; தலைமை பேசவில்லை என்பது இன்று யாதார்த்தமாகவுள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அவற்றைத்  தீர்ப்பதற்கு நாம் பல முயற்சிகளை செய்து வருகின்றோம் அவை தீர்க்படாவிட்டால், அப்பிரச்சினைகளை ஜெனீவாவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொண்டு செல்லும்' என்றார்.  
 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X