2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 100 வைத்தியர்களுக்கு தேவைப்பாடு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வைத்தியர்களுக்கு தேவைப்பாடு உள்ளதாக மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரட்ணராஜா தெரிவித்தார்.

வைத்தியர் பற்றாக்குறை காரணமாக இம்மாவட்டத்திலுள்ள 6 ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் கடந்த சில தினங்களுக்குள்  மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்றுக் கட்டடத்தொகுதி திறப்பு விழா சனிக்கிழமை இரவு (4) நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த வருடத்தில் 3 வைத்தியர்கள் மாத்திரமே மட்டக்களப்புக்கு விடுவிக்கப்பட்டு வந்து சேர்ந்திருக்கின்றார்கள்.

அடுத்த ஒரு சில நாட்களில் பயிற்சி முடித்து வெளியேறவுள்ள 1,000 வைத்தியர்கள் மற்றும் 1,000 தாதியர்களில் குறைந்தது இம்மாவட்டத்துக்கு தேவையாகவுள்ள 100 வைத்தியர்களையும் 100 தாதியர்களையும் பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும். எனவே, எமது  மாகாண முதலமைச்சர் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் அக்கறை எடுத்துச் செயற்பட வேண்டும்.

மேலும், ஏறாவூரிலுள்ள வைத்தியசாலை உட்பட 4 ஆதார வைத்தியசாலைகளை முன்னேற்றி அவற்றின்  மூலம் மக்களுக்கு சிறந்த வைத்திய சேவைகளை வழங்க வேண்டும்.

தூரக் கிராமங்களான கதிரவெளி மற்றும் மண்டூரிலுள்ள வைத்தியசாலைகள் உட்பட இன்னும் பல வைத்தியசாலைகள் ஒரேயொரு வைத்தியரை மாத்திரமே கொண்டு இரவு, பகலாக இயங்குகின்றன' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X