2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29000 விதவைகள்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 29000 விதவைகள் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட ஒன்று கூடல் ஞாயிற்றுக்கிழமை (29) மட்டக்களப்பு சத்துருக் கொண்டானிலுள்ள சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29,000 விதவைகள் உள்ளனர். அதேபோன்று கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் அதிகளவாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளனர்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் முழுமையான எண்ணிக்கை இன்னும் அறிக்கையிடப்படவில்லை. ஏனெனில் சிலர் திருமணம் செய்ததை இவர்கள் பதிவு செய்யாததால் இந்த விபரம் இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டம் அதிகம் மதுபானம் விற்பணை செய்யக் கூடிய மாவட்டமாகவும் உள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறை, குடும்ப வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம், பாடசாலை செல்லாத சிறுவர்கள் என சமூகச் சீரழிவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன.

இவ்வாறான சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களின் ஊடாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இது தொடர்பாக மாதாந்தம் பிரதேச செயலாளர்களுடன் கூட்டங்களை நடாத்தி இதை கட்டுப்படுத்துவதற்காக பிரதேச மட்டத்திலுள்ள எமது உத்தியோகத்தர்களை கொண்டு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த சமூகத்தில் இவ்வாறான சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு சமதான நீதவான்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

சமூக மட்டத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இந்த மாவட்டத்தில் எந்த அடிப்படை வசதிகளுமில்லாத தனியார் டியூசன் நிலையங்களுக்கு மாணவர்கள் படையெடுக்கின்றனர்.

அங்கு அவர்களுக்கு எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதில்லை. குடிப்பதற்கு கூட குடிநீர் வசதிகள் இல்லை. இதுவும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகமாகும்.

சிறுவர்களின் நலன்கள் விடயத்தில் அக்கறை செலுத்தப்படல் வேண்டும்.

சிறுவர்களின் வாழ்க்கை கல்வி மாத்திரமல்ல. விளையாட்டு கலை, கலாசாரம் இவையூடான கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் மூன்று இலட்சம் மக்களை மூன்று வருடங்கள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் வழிகாட்டலிலும் உதவியுடனும் பராமரித்தேன். 

அவர்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்தினேன். அவர்களை பராமரிப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள்.

நான் மட்டும் அதை மேற்கொள்ளவில்லை. வவுனியாவிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் இதற்காக உதவினார்கள். அவர்கள் மக்களை பராமரிப்பதற்காக வழங்கிய அந்த கடனை ஒரு நாள் கூட என்னிடம் வந்து கேட்டதில்லை.

நாங்கள் அதை திருப்பி கொடுக்கும் வரை காத்திருந்தார்கள். அதனை கொடுப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள்.
இதற்காக நாடாளுமன்றத்தில் விசேட திட்ட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டு அதன்மூலம் கிடைத்த நிதியினை கொண்டு அவர்களின் கடனை கொடுத்தோம்.

அஸ்கிரிய பீடத்தின் தலைவரும் அங்கு வந்து பார்வையிட்டு உதவினார்.

அந்த மக்களின் மரணச் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்றைவைகள் பெறுவதற்கு உங்களை போன்ற சமாதான நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள்.

அதன் மூலம் அவர்களுக்கான கொடுப்பனவுகள் துரிதப்படுத்தப்படுத்தப்பட்டன.

இவ்வாறு சகலருடைய ஒத்துழைப்புடனும் இந்த வேலைத்திட்டத்தினை அங்கு மேற்கொண்டோம்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X