2026 மே 07, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் சிவில் சமூக அமைப்பு ஸ்தாபனம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பில் முதன்முறையாக சிவில் சமூக அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக சேவையாளர்கள், ஆன்மீகப் பணி செய்வோர், ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரிகள் என தமிழ் முஸ்லிம் சமூகங்களை உள்ளடக்கிய பலர் இடம்பெறுகின்றனர்.

'ஆயுத வன்முறைகளுக்குப் பின்னரான தற்போதைய சூழ்நிலையில் சிவில் சமூகம் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பங்களிப்புச் செய்து பணியாற்ற வேண்டியிருப்பதனால் சிவில் சமூக அமைப்பொன்றை காலத்தின் தேவை கருதி உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக' அதன் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான கலாநிதி கே.பிறேமகுமார் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு கத்தோலிக்க மண்டபத்தில் இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.

இந்த அமைப்பின் போஷகர்களாக மட்டு திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, துணை ஆயர் பொன்னையா ஜோசப், மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சுவாமி கபாலீஸ்வரானந்தா, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

தலைவராக கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பதில் உபவேந்தர் கலாநிதி கே.பிறேம்குமார், உப தலைவர்களாக வர்த்தகப் பிரமுகர் கே.எம்.எம்.கலீல், முன்னாள் அரசாங்க அதிபர் சி.புண்ணியமூர்த்தி ஆகியோரும் இணைச்செயலாளர்களாக முன்னாள் சிறைச்சாலைகள் அதிகாரி  பி.கே.என்.மூர்த்தி, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு பதில் தலைவர் சனி ஒக்கர்ஸ் ஆகியோரும் தெரிவாகினர்.

பொருளாளராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதம கணக்காளர் பி.முத்துலிங்கம், சிரேஷ்ட ஆலோசகராக கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேசராசியர் சங்கைக்குரிய பிதா ஜீ.எப்.ராஜேந்திரா ஆகியோரும் இணைப்பாளரும் இலகுபடுத்துநருமாக முன்னாள் கிழக்கு மாகாண சபையின் செயலாளரான எஸ்.மாமாங்கராஜா ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர்களுடன் 17பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .