2026 மே 04, திங்கட்கிழமை

புல்லுமலைப் பிரதேச முன்னேற்றத்திற்கான தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 மே 27 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


கடந்த கால யுத்தம் காரணமாக  பாழடைந்து போயுள்ள புல்லுமலைப் பிரதேச மக்களின் முன்னேற்றத்திற்கான தேவைப்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் அம்பிட்டிய, புல்லுமலைப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ்,  சிங்கள கிராமத்தலைவர்கள் ஈடுபட்டனர்.

மீள்குடியேற்றக் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் மீள்குடியேற்றத்தை மேம்பாடடையச் செய்யும் முயற்சியில் அம்பிட்டிய, புல்லுமலைப் பிரதேசங்களின் தமிழ், சிங்கள கிராமத்  தலைவர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான வசதிகளை யு.எஸ்.எயிட் நிறுவனம் வழங்கி வருகிறது.

இன்றைய கூட்டத்தில் அம்பிட்டிய, பெரிய புல்லுமலை பிரதேசங்களின் ஆலயங்கள், பௌத்த விகாரைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் புல்லுமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் கூடிக் கலந்துரையாடினர்.

இக்கிராமத்தின் முன்னாள் கிராம அலுவலகரும் சமூக சேவையாளருமான சொலமன் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பஸ் நிலையம், யாத்திரிகர்கள் தங்குமிடம், பலநோக்கு கட்டடம், மருத்துவமனை, பொதுச்சந்தை, போன்றவற்றை அமைப்பதற்கான இடங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இது தொடர்பான திட்டத்தினை ஆவணமாகத் தயாரித்து பிரதேச செயலாளரிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்ற தீர்மானத்திற்கு  தமிழ், சிங்கள ஆலயங்களின் நிர்வாகிகள் வந்தனர். முடிவுகள் குறித்து உற்சாகமடைந்த மக்கள் ஆலயங்களில் சிரமதானங்களை மேற்கொண்டனர்.

பெரிய புல்லுமலை றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய அதிபர் கலாநிதி ரவிச்சந்திரா,  யு.எஸ்.எயிட்டின் இத்திட்டத்திற்கான ஏற்பாட்டாளரும் ஆலாசகருமான கமலதாசிடம் தமது பாடசாலைக்கு அதிபர், ஆசிரியர்கள் தங்கிச் செல்வதற்கான விடுதி வசதியை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமமான புல்லுமலைப் பிரதேசத்திலுள்ள  தமிழ்,  சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .