2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும்: கிழக்கு பல்கலையின் ஆசிரியர் சங்கம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கடந்த 74 நாட்களாக மேற்கொண்டுவரும் போராட்டங்கள் தமது கோரிக்கைகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் வரை தொடரும் என கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஜே.கெனடி தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு சுபராஜ் விடுதியில் நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஜே.கெனடி, செயலாளர் கலாநிதி எம் பக்திநாதன், சிரேஸ்ட உறுப்பினர்களான கலாநிதி ரி.ஜெயசிங்கம், கலாநிதி கே.ஜெயசங்கர், விரிவுரையாளர் எம்.ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த கலாநிதி கெனடி,

'இலங்கையின் கல்விக்கான நிதியொதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், தேசிய கல்விக்கொள்கையை உடன் அமுல் படுத்த வேண்டும், பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.

வெளிநாட்டவர்களுக்கான புலமைப்பரிசில்களுக்காக ஒதுக்கப்படும் அதிகளவான நிதியினை எமது நாட்டு மாணவர்களுக்குப் பயன்படுத்தலாம், பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புகள் உள்ளிட்டு கோரிக்கைகளை முன்வைத்து எங்களது தொழில் சங்கப் போராட்டம் கடந்த 74 நாட்களாக நடைபெற்று வருகிறது.

மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்தல், சம்பள பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட எமது முக்கிய கோரிக்கைகள் உள்ளிட்டவை அவற்றில் முக்கியமானவைகளாகக் காணப்படுகின்றன. 2011ஆம் ஆண்டின் இடைக்கால தீர்வின்படி எமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் தமது தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என எமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த ஒழுங்கில் நாங்கள் எங்களது போராட்டத்தினை முன்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம்.

ஒரு கொள்கை மட்டத்திலான ஆவணத்திலான தீர்வினை விடவும், சம்மேளனத்தின் கோரிக்கைகளுக்கான உறுதியான தீர்வு கிடைக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். கல்வியியலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 8 தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் சம்மேளனத்திற்கு கிடைத்தது எனவும் இப்பெறுபேறு குறித்து, சம்மேளம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இதே நேரம், இங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி ரி.ஜெயசிங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுதலிகப்பட வேண்டியது ஏனெனில் கொள்கைரீதியான பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தர் நியமிப்பது பொருத்தப்பாடற்றதாக இருக்கும். நாங்கள் கல்வியாளர்கள் என்ற அடிப்படையிலும் தொழிற்சங்க ரீதியிலுமே எமது போராட்டத்தினை நடத்தி வருகிறோம்.

இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நடத்தி வருகின்ற தொழிற்சங்கப் போராட்மானது, அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமும், பல்கலைக்கழகங்களைப் பாதூக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டங்கள்,  பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வேலைத்திட்டம் என தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .