2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

செங்கலடி, களுவாஞ்சிக்குடி பிரதேச சபைகளை நகரசபைகளாக்க திட்டம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 24 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
 
மட்டக்களப்பில் செங்கலடி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேச சபைகளையும் ஒருசில மாதங்களுக்குள் நகர சபையாக மாற்றவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அதாவுல்லா உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள தமிழ் பிரதேச சபைகளான இவ்விரு பிரதேசசபைகளினதும் ஆயுட்காலம் ஒரு சில மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையிலேயே அவற்றை நகர சபையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொன் செல்வராசா எம்.பி கூறினார்.

நாடாளுமன்ற கட்டிடத்தின் இலக்கம் 01 குழு அறையில் மாகாண சபையிகள் உள்ளூராட்சி அமைச்சின் அதாவுல்லா தலைமையில் நடைபெற்ற மாகாண சபைகள், உள்ளூராட்சிசபை அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தன்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் அதாவுல்லா இந்த முடிவினைத் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
 
இந்தக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். 'மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் பிரதேசங்களில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் ஒரு வருடத்திற்கு பிற்போடப்பட்டன. ஆனால் அதுவும் முடிவுறு காலத்தை எதிர் நோக்கியுள்ளது. இந் நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எந்த சட்ட விதிகளுக்கு அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
 
புதிய சட்ட விதிகள், அல்லது பழைய சட்டம் ஆகியவற்றில் எதன் அடிப்படையில்; தேர்தல் நடத்தப்படும். புதிய சட்டத்தின் கீழ் என்றால் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். நில அளவைகள் திணைக்களத்தின் மூலம் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டதன் பின்னரே அவற்றை கொண்டு தேர்தல் நடாத்த முடியும் இது மேலும் கால தாமத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் எந்தக் கூட்டத்திற்கு அமைய தேர்தல் வைப்பது.
 
மட்டு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் ஒரு சில மாதங்களில் முடிவுறும் நிலையேற்பட்டுள்ளது. எனவே இதனை மேலும் நீடிக்காமல் பழைய நிலையின்படி தேர்தலை நடத்தக் கூடியவாறு நடவடிக்கை எடுக்க முடியும்.
 
மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கீழ் உள்ள ஒரு சில மயானங்கள் வர்த்தமானியில் அறவிக்கப்பட்டுள்ள போதும் அநேகமான மயானங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை. அவைகளும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானிப்படுத்தப்பட வேண்டும்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயானக் காணிகளை பொதுமக்கள் அபகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றினை வர்த்தமானியில் பிரசுரித்து மயானக் காணிகளை பாதுகாக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றத்தின் கீழ் ஏதோ ஒரு நகர சபையே உள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபை இரண்டை மாநகரசபைகளை தரமுயர்த்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடி, செங்கலடி ஆகிய பிரதேச சபைகளை நகர சபையாக தரமுயர்த்தி தர நடவடிக்கை எடுக்கவும் என்றார்.
 
நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்களுக்குப் பதிலழித்த உள்ளுராட்சி அமைச்சர் அதாவுல்லா, இவை முக்கியமான பிரச்சனைகளாகும். இது தொடர்பில் எல்லை நிர்ணயம் செய்து அவற்றை விரைவில் வர்த்தமானிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தேர்தலை நடாத்த வேண்டும் என்றால் எல்லை நிர்ணயத்தை கால அவகாசம் இன்றி விரைவில் செய்யலாம். ஆனாலும் தேர்தலை நடத்துவதை தீர்மானிப்பது அரசாங்கமும் தேர்தல் திணைக்களமும் தான் புதிய முறையில் தேர்தலை நடத்துவது என்றால் அதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க முடியும். பழைய முறைகள் தேர்தலை நடத்துவது தொடர்பில் எந்தளவு சட்ட வரைமுறைக்கு உட்பட்டது. அல்லது அதற்குட்பட்டு செய்ய முடியுமா? என்பது கேள்வியே.
 
பிரதேச சபைகளை நகர சபைகளாக்கும் யோசனை, நல்ல யோசனை. இவை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்கிறேன் எனத் தெரிவித்ததுடன், அதிகாரிகளையும் பணிப்புரை விடுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .