2026 மே 04, திங்கட்கிழமை

சிறுவர்கள் கடத்தல் குறித்து அவதானமாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லோஹித், எம்.சுக்ரி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர் பிரதேசத்தில் சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

காத்தான்குடியிலும் அதனைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களிலுமுள்ள பள்ளிவாயல் ஒலிபெருக்கிகளின் ஊடாகவே இந்த  அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

சம்மேளனத்தின் பணிப்பின் பேரில் இந்த அறிவித்தல் சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவருகின்றது.

நமது பிரதேசத்தில் சிறுவர்கள் காணாமற் போவது அல்லது கடத்தப்படுவது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இதுவரை மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இது சம்பந்தமாக பொது மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும், வெளியில் மேலதிக வகுப்புகளுக்கோ, விளையாடுவதற்கோ அல்லது வேறு அலுவல்களுக்கோ செல்லும் சிறுவர்கள் உரிய நேரத்திற்கு வீடு திரும்புகின்றார்களா? என்பதை பெற்றோர்கள் கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் ஏதாவது நிகழ்ந்தால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கும் அத்துடன் சம்மேளனத்திற்கும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்குள் சிறுவர்களை கடத்திய சம்பவங்கள் மூன்று இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சம்பவங்களில் 4 சிறுவர்கள் கடத்தப்பட்டு மட்டக்களப்பில் விடுவிக்கப்பட்டு;ள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கடந்த 3 மாதத்துக்கு முன்னர் இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டனர். அவர்கள் இருவரும்  மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு  அருகில்
வைத்து தப்பிச்சென்று மாமாங்கம் பிரதேசத்திலுள்ள ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக இருந்தபோது  பொலிஸாரினால் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

அதேநேரம், ஆரையம்பதி வைத்து 12 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு வானில் ஏற்றிச் செல்லப்பட்ட நேரம் கல்லடி பாலத்தின் அருகில் வைத்து அவர் தப்பித்து வீடு சென்றிருந்தார்.

அத்துடன், காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த 9ஆம்திகதி சனிக்கிழமை இனம் தெரியாதோரினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய காத்தான்குடி பரீட் நகர் பாம் வீதியில் வசிக்கும் சுஹைப் முகம்மது அர்ஹாம் எனும் 12 வயது சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச் சிறுவன் சனிக்கிழமை புதிய காத்தான்குடி பதுறியா வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத சிலரினால் கடத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இச் சிறுவனின் பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவனை காணவில்லையென முறைப்பாடு  செய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸார் மற்றும் சிறுவனின் குடும்ப உறவினர்கள் சிறுவனை தேடிக் கொண்டிந்த போது சிறுவன் சனிக்கிழமை பிற்பகல் வீடு வந்து சேர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சிறுவன் பொலிஸாருக்கு தெரிவிக்கையில், தன்னை ஆறு பேர் வெள்ளை வானில் கடத்திச் சென்றதாகவும் மட்டக்களப்பு வழியாக கொண்டு சென்று மட்டக்களப்பிலுள்ள வாவியோரமாகவுள்ள வீதியோரத்தில் தன்னை தள்ளிவிட்டு சென்றதுடன் தனது சைக்கிளையும் கீழே போட்டு விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களையடுத்தே காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இந்த குறித்த அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்துக்குள் நடைபெற்றுள்ள இச் சிறுவர் கடத்தல்கள் எதற்காக நடைபெறுகின்றன. என்பது தொடர்பிலும் கடத்தல் காரர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் தாம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .