2026 மே 04, திங்கட்கிழமை

ஒந்தாச்சிமடத்தை சேர்ந்த இருவர் இந்தோனேஷியாவில் தடுத்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி-ரி.லோஹித்

மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த இருவர் இந்தோனேஷியாவின் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இருவரையும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கு உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவிடம் அவர்களது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் இருவரும் மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணம் செய்தபோது, இந்தோனேஷிய கடலில் கைதுசெய்யப்பட்டு அந்த நாட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2011 - 2012 ஆண்டுகளில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு சட்டரீதியாக வேலைவாய்ப்பு பெற்றுச்சென்ற இந்த இளைஞர்கள் இருவரும் அங்கு தொழில் புரிந்துவந்த நிலையில், அதனைக் கைவிட்டு அவுஸ்திரேலியாவுக்கான பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

2011ஆம் ஆண்டு தனது மகன் மலேசியாவுக்கு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் மூலம் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றதாகவும்  ஒவ்வொரு மாதமும் மகன் பணம் அனுப்பிவைத்ததாகவும் இந்த இளைஞர்களின்  தாயார் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்கைப் ஊடாக கடந்த வருடம் தொடர்புகொண்ட தனது மகன், மலேசியாவில் வேலை செய்வது கஷ்டம் எனவும் சம்பளம் போதாது என்பதனால் இங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கள் செல்கிறார்கள்.

தானும் அவர்களுடன் போக விரும்புவதாகவும் அதற்கு 9 இலட்சம் ரூபா செலவாகும் எனக் கூறி, அதற்குரிய உள்ளூர் ஏற்பாட்டாளர் பற்றியும் என்னிடம் தெரிவித்திருந்தார்.

இதன் பிரகாரம் எனது காணியையும் மகளுக்கு கொடுத்த சீதனக் காணியையும் அடகு வைத்து அந்த பணத்தை உரிய நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தோம். ஆனால், இப்போது அந்த முகவருடன் எவ்விதமான தொடர்புகளையும் மேற்கொள்ள முடியவில்லை.

2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியாவில் தொழிலை கைவிட்டிருந்த மகன் மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு எப்போது புறப்பட்டார் என்பது பற்றி எமக்குத் தெரியாது.

ஆனால் நான்கு மாதங்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகன் இந்தோனேசியா கடலில் வைத்து சிக்கிக்கொண்ட தாம் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொலைபேசியில் ஒரு சில நிமிடங்களே பேசிய மகன், சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்புப் பிரதிநிதிகள் பார்வையிட்டு இலங்கையிலிருந்து கடவுச்சீட்டு கிடைக்கப்பெற்றவுடன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் எம்முடன் எவ்விதமான தொடர்புகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.


மற்றுமொரு தாயார் இது பற்றிக் கூறுகையில்,

மலேசியாவில் எனது மகனும் தொழில் வாய்ப்புப் பெற்று சில மாதங்களுக்கு முன்புதான் சென்றிருந்தார். இவர்கள் மட்டுமல்ல எமது ஊரைச் சேர்ந்த இன்னும் சிலரும் மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல விரும்பியிருந்தார்கள். எனது மகனின் பயணத்திற்காக சுமார் 10 இலட்சம் ரூபாவரை முகவரிடம் செலுத்தியிருந்தேன்.

இந்தோனேசியவில் கைதுசெய்யப்பட்ட தகவல் வெளியானவுடன் பயண முகவரும் தலைமறைவாகிவிட்டார். மகன் தடுத்து வைக்கப்பட்டுள்ள  இந்தோனேசியா முகாமில் எனது பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் நான்கு பேர் இருப்பதாக மகன் கூறியிருந்தார்.

ஒரு தடவை மட்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். எனது மகன் அதற்கு பின்னர் எவ்விதமான தொடர்புகளையும் கொள்ளவில்லை என்றார்.

இதேவேளை இந்தோனேசியாவிலுள்ள முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இருவர் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தோனேசியா தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்  பொன். செல்வராசா தெரிவித்தார். 

இதன்போது இவர்கள் பற்றிய விபரங்கள் தங்களிடம் இல்லை என பதிலளித்த தூதுவராலய அதிகாரிகள், அந்நாட்டு தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்துவிட்டனர் எனவும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .