2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மண் அகழ்வை தடுக்குமாறு கோரிக்கை

Super User   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எல். தேவ அதிரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இர.துரைரெட்ணம் தெரிவித்துள்ளர்.

மணல் அகழ்வால் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் குறித்து பிரதேச அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

"மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் சந்தனமடு ஆற்றுப்பகுதி வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் தும்பாலை ஆற்றுப் பகுதிகளில் நீண்ட காலமாக விவசாயிகளும், பொதுமக்களும்  பாதிக்கப்படும் வகையில் சிலர் மண் அகழ்வு செய்து வருகின்றனர்.

இம்மண் அகழ்வால் ஆறுகள் அகலமாக்கப்படுவதும், பள்ளமாக்கப்படுவதும் பாதைகள் பழுதடையும் சூழ்நிலையும் ஏற்;பட்டுள்ளது. ஆறுகள் அகலமாக்கப்படுவதால் அதிகமான வெள்ளப்பெருக்கும் ஆறுகள் பள்ளமாக்கப்படுவதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்சலில் போது பெரும் சிரமம் ஏற்படுவதும் வயல் நிலங்கள் உயரமாகவும் மாறுகின்றன.

பொதுமக்கள் பல முறைப்பாடுகளைத் தெரிவித்தும் மண் அகழ்வு நிறுத்தப்படவில்லை. தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. கடந்த காலத்தில் இப்பிரதேசங்களில் மண்அகழ்வு காரணமாகவும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது மறுக்கப்பட முடியாதவையாகும்.

எதிர்காலத்தில் வேளாண்மைச் செய்கைக்கு நீர் பாய்ச்சுவதில் பெரும் சிரமத்தை விவசாயிகள் எதிர் நோக்குவர் மத்திய அரசைப் பொறுத்தவரையில் விவசாய அமைப்புக்களிடமோ நீர்பாசனத் திணைக்களத்திடமோ எவ்வித ஆலோசனையும் பெறாமல் ஒருசில அரசியல்வாதிகளின் பணவசூலுக்காகவும், தனிப்பட்ட நலனுக்காகவும் மண்அகழ்வுக்கு அனுமதி கொடுப்பதால் முழு சமூகமுமே பாதிப்படைகின்றது.

பல அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக, விவசாய அமைப்புக்கள் ஆட்சேபனை தெரிவித்தும் ஒருசில அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் உத்தரவுகளை வழங்குவதால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் இந்நிபந்தனைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
ஆகவே சமூக நலன்களைக் கருத்திற் கொண்டு நிரந்தரமாக விவசாயச் செய்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கும், சம்மந்தப்பட்டோர் மண்அகழ்வை நிறுத்தவும் இதில் சம்பந்தப்பட்ட சுயநலமுள்ள அரசியல்வாதிகள் இனிமேலாவது தவறான செயற்பாடுகளை நிறுத்துவதோடு, அபிவிருத்திக்கு மண் கட்டாயத் தேவையாகும். இவைகள் பாதிப்புக்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு வழிவகுக்க வேண்டும்.

குறிப்பிட்ட தினங்களாக நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் மணல் ஏற்றுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் வேத்துச்சேனை, வந்தறுமூலை பிரதேசத்தில் மயிலவெட்டுவான் மற்றும் சித்தாண்டி ஆகிய பிரதேசங்கள் வெள்ள நீரல் அடிக்கடி மூழ்கி வருவதனை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இவை அனைத்தும் தொடருமானால் அடுத்தவரும் வாரங்களில் சமூகத்தில் செயற்படுகின்ற வெகுஜன அமைப்புக்கள் அனைத்தும் அணிதிரண்டு தங்களுடைய ஆட்சேபனையை எழுத்து வடிவிலும், வெகுஜன ரீதியாகவும் வெளிப்படுத்த அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றேன்" என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .